

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் மொகாலியில் வருகிற அக்டோபர் 27-ந்தேதி முதல் நடைபெற இருக்கிறது. இதில் பாகிஸ்தான் பங்கேற்க மறுத்துள்ளது. இது தொடர்பாக ஆசிய ஹாக்கி பெடரேசனிடம் சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்தியாவில் இருந்து மாற்ற வேண்டும். அல்லது தாங்கள் விளையாடும் போட்டிகளை பொதுவான ஒரு இடத்தில் (இந்தியாவுக்கு வெளியில்) நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் ஹாக்கி பெடரேசன் தலைவர் மொகியுதீன் அகமது வானி கூறுகையில் "ஆசிய ஹாக்கி பெடரேசனை பாகிஸ்தான் ஹாக்கி பெட்ரேசன் அணுகியது. அப்போது தொடரை இந்தியாவில் இருந்து மாற்ற வேண்டும். இல்லையெனில் பாகிஸ்தான் விளையாடும் போட்டிகளை பொதுவான இடத்தில் நடத்த வேண்டும். இரு நாடுகளுக்கும் இடையிலான உணர்ச்சிபூர்வமாக தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு வீரர்கள் மற்றும் ஸ்டாஃப்களின் பாதுகாப்பு சூழ்நிலைக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், "பாகிஸ்தானின் தடையற்ற மற்றும் முழுமையான பங்கேற்பை உறுதிசெய்யும் வகையில், நடுநிலையான ஒரு மைதானத்தைத் தேர்வு செய்வது குறித்த எங்களின் கண்ணியமான முன்மொழிவை ஆசிய ஹாக்கி சம்மேளனம் சாதகமாகப் பரிசீலிக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்றார்.
பாகிஸ்தான் அணி அக்டோபர் 27-ந்தேதி முதல் நவம்பர் 5-ந்தேதி வரை நடைபெறும் ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் ஜலந்தர் மற்றும் மொகாலியில் விளையாடும் என்று பஞ்சாப் மாநில முதல்வர் பகவத் மான் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பாகிஸ்தான் இவ்வாறு தெரிவித்துள்ளார்.