ஆசிய விளையாட்டு: மாரத்தானில் 44 ஆண்டுக்கு பிறகு வெள்ளி-புதிய வரலாறு படைத்த சாவன் பர்வால்

சாவன் பர்வால் பந்தய தூரத்தை 2 மணி 11.37 நிமிட நேரத்தில் கடந்தார்.
sawan barwal
Published on: 
Summary

ஆசிய விளையாட்டுப் போட்டியில் மாரத்தானில் 44 ஆண்டுக்கு பிறகு வெள்ளி பெற்று புதிய வரலாறு படைத்தார் சாவன் பர்வாள்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று காலை ஆண்களுக்கான மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

பர்வாலுக்கு வெள்ளி

42.195 கிலோ தூரத்துக்கான இந்த பந்தயத்தில் இந்தியா சார்பில் சாவன் பர்வால், கார்த்திக் கர்கெரா ஆகியோர் பங்கேற்றனர். மொத்தம் 19 வீரர்கள் கலந்துகொண்டனர்.

இதில் சாவன் பர்வால் 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்று முத்திரை பதித்தார். அவர் பந்தய தூரத்தை 2 மணி 11.37 நிமிட நேரத்தில் கடந்தார்.

யாருமே எதிர்பார்க்காத வகையில் பர்வால் பதக்கம் பெற்றுக் கொடுத்து நாட்டுக்கு பெருமை சேர்த்தார். பந்தய தூரத்தைக் கடந்ததில் அவர் தனது சாதனையை முறியடித்து புதிய தேசிய சாதனை படைத்தார்.

44 ஆண்டுகளுக்கு பிறகு

44 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய விளையாட்டில் மாரத்தானில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியர் என்ற வரலாற்றை பர்வால் படைத்தார்.

இதற்குமுன் 1982-ம் ஆண்டு டெல்லியில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் மாரத்தானில் தமிழகத்தைச் சேர்ந்த குத்தப்பா சீதாரன் வெண்கல பதக்கம் பெற்று இருந்தார். அதற்கு பிறகு தற்போதுதான் இந்தியாவுக்கு மாரத்தானில் பதக்கம் கிடைத்துள்ளது.

ஒட்டுமொத்தமாக ஆசிய விளையாட்டு மாரத்தானில் பதக்கம் வென்ற 4-வது இந்தியர் பர்வால் ஆவார். 1951-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற அறிமுக ஆசிய விளையாட்டில் சோட்டா சிங் தங்கமும், சூரத்சிங் வெண்கல பதக்கமும் பெற்று இருந்தனர்.

இமாச்சலபிரதேசம்

புதிய வரலாறு படைத்த சாவன் பர்வால் இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்தவர். 28 வயதான அவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். அவரது தந்தை குல்தீப் டிரைவராக இருக்கிறார்.

14-வது வயதுக்கு அவர் 1,500 மீட்டர் ஆட்டத்தில் அறிமுகம் ஆனார். 5 ஆயிரம், 10 ஆயிரம் மீட்டர் ஆட்டத்தில் பங்கேற்ற அவர் பின்னர் நீண்டதூர ஓட்டமான மாரத்தானுக்கு மாறினார்.

தடகளத்தில் இந்தியாவுக்கு கிடைத்த 5-வது பதக்கமாகும். இதில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீரரான கார்த்திக் 17-வது இடத்தைப் பிடித்தார்.

ஜப்பானைச் சேர்ந்த இச்சிடாகா யமாஷிதா தங்கம் பெற்றார். அவர் பந்தய தூரத்தை 2 மணி 10.49 நிமிடத்தில் கடந்து தங்கமும், சீன வீரர் பெங் 2 மணி 12.13 நிமிடத்தில் கடந்து வெண்கலமும் பதக்கம் பெற்றுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com