வெட்டுவானம் எல்லையம்மன் கோவிலில் ஆடி பிரம்மோற்சவ தேரோட்டம்

ஆடி பிரம்மோற்சவ விழா கடந்த வாரம் யாக சாலை பூஜைகளுடன் தொடங்கியது.
Ratha Yatra
Published on

ஆடி மாதம்

ஆடி மாதத்தில் தேடி வரும் திருவிழாக்களை நாம் கொண்டாடி மகிழ்ந்தால், கோடிப் புண்ணியமும், கோலாகல வாழ்க்கையும் கிடைக்கும். ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக போற்றப்படுகிறது. குறிப்பாக இந்த மாதத்தில் வரும் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வருவார்கள்.

பிரம்மோற்சவ விழா

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம் கிராமத்தில் அமைந்துள்ள எல்லையம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தை முன்னிட்டு 10 நாட்கள் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். இதில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

யாக சாலை பூஜை

அதன்படி, இந்த ஆண்டுக்கான ஆடி பிரம்மோற்சவ விழா கடந்த வாரம் யாக சாலை பூஜைகளுடன் தொடங்கியது. தொடர்ந்து கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றதையடுத்து அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.

எல்லையம்மன்

இரவு நேரங்களில் எல்லையம்மன் சிம்மவாகனம், காமதேனு வாகனம், பூத வாகனம், நாக வாகனம், அன்ன வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம், கிளிவாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிகளில் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.

கோவில்

பிரம்மோற்சவத்தின் 7-ம் நாளான நேற்று முன்தினம் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக எல்லையம்மனுக்கு பார்வேட்டை அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் மேளதாளங்கள் முழங்க, அம்மன் உற்சவம் கோவிலில் இருந்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு திருத்தேரில் எழுந்தருளச் செய்யப்பட்டன.

பக்தர்கள்

மிளகு, உப்பு போன்ற பொருட்களை தேர்மீது தூவி நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா என பக்தி முழக்கமிட்டபடி தேரை வடம்பிடித்து இழுத்தனர். பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள் என அனைவரும் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்ற தேர் மாலை 6 மணியளவில் நிறைவடைந்தது.

தேரோட்டம்

தேரோட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் விஜயா, உதவி ஆணையர் சங்கர், கோவில் செயல் அலுவலர் சண்முகம், கணக்காளர் சரவண பாபு, கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com