வெட்டுவானம் எல்லையம்மன் கோவிலில் ஆடி பிரம்மோற்சவ கொடியேற்றம்

மூலவர் சன்னதியில் எல்லையம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
Vettuvanam Ellaiamman
Published on

வெட்டுவானம் எல்லையம்மன் கோவில்

வேலூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று வெட்டுவானம் எல்லையம்மன் கோவில். ஆண்டுதோறும் இந்த கோவிலில் ஆடி பிரம்மோற்சவ விழா நடப்பது வழக்கம்.

ஆடி பிரம்மோற்சவ விழா

அதேபோல் இந்த ஆண்டுக்கான ஆடி பிரம்மோற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதையொட்டி அதிகாலை முதலே கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்தனர்.

அபிஷேகம்

கோவில் மண்டபத்தில் எழுந்தருளிய உற்சவர் எல்லையம்மனுக்கு நவ திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்து, வேத மந்திரங்கள் முழங்க காப்பு அணிவிக்கப்பட்டது. காலை 11.15 மணிக்கு கோவில் கொடிமரத்தில் மங்கள வாத்தியங்கள் இசைக்க பிரம்மோற்சவ கொடியேற்றம் நடந்தது.

சிறப்பு அலங்காரம்

அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் பக்தி கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து கொடிமரத்துக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. அப்போது, தர்பைப்புல், மலர் மாலைகள் கொடிமரத்துக்கு அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

சிறப்பு பூஜைகள்

இதையடுத்து உற்சவர் எல்லையம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. அதேபோல் மூலவர் சன்னதியில் எல்லையம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கொடியேற்ற நிகழ்ச்சிக்கான பூஜையை கோவில் அர்ச்சகர் சந்திரசேகர் குருக்கள் வேத மந்திரங்கள் முழங்க நடத்தி வைத்தார்.

பக்தர்கள்

இதில் கோவில் செயல் அலுவலர் சண்முகம், கணக்காளர் சரவணபாபு, கோவில் பணியாளர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு எல்லையம்மனை தரிசனம் செய்தனர்.

பிரம்மோற்சவ விழா

அதேபோல், இந்த ஆண்டு ஆடி பிரம்மோற்சவ விழா தொடர்ந்து 10 நாட்கள் நடக்கின்றன. விழா நாட்களில் தினமும் காலை, இரவில் உற்சவர் அம்மன் பல்வேறு சிறப்பு அலங்காரத்தில் வாகனங்களில் எழுந்தருளி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

ஆடி வெள்ளிக்கிழமை

விழாவின் 4-வது வெள்ளிக்கிழமை முக்கிய நிகழ்ச்சியாக தேர்த்திருவிழா, 5-வது வெள்ளிக்கிழமை தெப்பல் உற்சவம், 6-வது வெள்ளிக்கிழமை லட்ச தீபம், 7-வது வெள்ளிக்கிழமை அம்மன் வீதி உலா நடக்க உள்ளதாக கோவில் செயல் அலுவலர் தெரிவித்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com