நாளை சோமவார பிரதோஷம்... கிருத்திகை... விரதம் இருக்க சிறந்த நாள்...

முருகப் பெருமானுக்குரிய கந்த சஷ்டி கவசம், வேல் மாறல் முதலிய கவசங்களை பாராயணம் செய்ய வேண்டும்.சிவபெருமான் அபிஷேகப் பிரியர்.
நாளை சோமவார பிரதோஷம்... கிருத்திகை... விரதம் இருக்க சிறந்த நாள்...
Published on

சிவ பெருமானுக்குரிய மிக முக்கியமான விரத நாட்களில் ஒன்று பிரதோஷ வழிபாடு. ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை பிரதோஷ விரதம் வரும். அந்த வகையில், நாளை ஆஷாட கிருஷ்ண பக்ஷத்தில் வரும் பிரதோஷ விரதம் திங்கட்கிழமை வருவதால் இது சோம வார பிரதோஷ விரதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் சிவபெருமானை வழிபடுவதால் ஆன்மிக வளர்ச்சி, அமைதி மற்றும் செல்வம் பெருகும். ஒவ்வொரு மாதமும் திரயோதசி திதியில் பிரதோஷ விரதம் வருகிறது. இந்த நாளில் சிவபெருமானை வழிபடுவது மிகவும் சிறந்தது.

சனிக்கிழமையில் வரும் சனிப்பிரதோஷம் எப்படி கிடைப்பதற்கு அரிய பலன்களை தரக் கூடிய மிக முக்கியமான பிரதோஷமோ, அதே போல் திங்கட்கிழமையில் வரும் சோமவார பிரதோஷமும் மிகவும் முக்கியமானதாகும். சிவ பெருமானுக்கும், சந்திரனுக்கும் உரிய திங்கட்கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகும்.

அதிலும் நாளை சோமவார பிரதோஷம், ஆனி மாத சிவராத்திரி மற்றும் முருகப் பெருமானுக்குரிய கிருத்திகை நட்சத்திரத்துடன் இணைந்து வருகிறது. இது மிக மிக சிறப்பான ஒன்றாகும்.

கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்துவருவது மேலும் ஒரு விசேஷம். கிருத்திகை முருகப் பெருமானின் நட்சத்திரம். முருகனும் சிவபெருமானும் வேறுவேறல்ல. சிவபெருமானின் அக்னி வடிவமே முருகக் கடவுள். முருகக் கடவுள் தேவர்களின் துயர்தீர்க்க அவதரித்தவர். கருணையே வடிவான வேலினைக் கையிலே கொண்டவர். அதோடு தகப்பன் சாமியாக சுவாமிமலையில் அமர்ந்து அருள்பாலிப்பவர். எனவே நாளை விரதம் இருந்து சிவபெருமானையும் முருகப் பெருமானையும் கட்டாயம் வழிபட வேண்டும். முருகப் பெருமானுக்குரிய கந்த சஷ்டி கவசம், வேல் மாறல் முதலிய கவசங்களை பாராயணம் செய்ய வேண்டும்.

சிவபெருமான் அபிஷேகப் பிரியர். அவருக்கு பிரதோஷத்தன்று கறந்த பசும்பால் கொண்டு அபிஷேகம் செய்து வழிபட்டால் சிறப்பான பலனைப் பெறலாம். இல்லையென்றால் இளநீர் அபிஷேகம் செய்வது நல்லது. இறைவன் இயற்கையை விரும்பக் கூடியவன். எனவே இயற்கையான வில்வ இலை அர்ச்சனையும் சிவபெருமானை மகிழ்ச்சிப்படுத்தும். இது தவிர தும்பைப் பூ மாலை அணிவித்து பிரதோஷம் அன்று, சிவனை வழிபட்டால் சகல தோஷங்களும் விலகும்.

பிரதோஷ தினத்தில் அதிகாலையில் நீராடி திருநீறணிந்து சிவ நாமம் ஆன நமசிவாய ஓதி உபவாசம் இருக்க வேண்டும். அன்று காலை முதல் பிரதோஷம் முடியும் வரை உணவு தவிர்த்து பிரதோஷ தரிசனம் முடித்து பிரசாதம் உண்டு விரதம் முடிக்க வேண்டும். பின்னர் இரவு உணவு சாப்பிடலாம். இப்படி பதினோறு பிரதோஷங்கள் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் சிவனருள் கிடைக்கும்.

பிரதோஷ காலம் என்பது சூரியன் அஸ்தமனத்திற்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும் சூரியன் அஸ்தமனத்திற்கு பின் மூன்றே முக்கால் நாழிகையும் ஆகும். ஒருநாழிகை என்பது 24 நிமிடங்கள். ஒரு மணிக்கு இரண்டரை நாழிகைகள். ஆக சராசரியாக மாலை 4 மணியில் இருந்து இரவு 7.30 வரை பிரதோஷ காலம் உண்டு. சௌகரியத்திற்காக மாலை 4.30 முதல் 6.00வரை என சொல்லப்படுகிறது.

பிரதோஷ விரதம் மேற்கொண்டால் திருமணம் கைகூடும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், வறுமைவிலகும், நோய்கள் நீங்கும், சகல காரியங்களில் வெற்றிகிடைக்கும், சகல சௌபாக்கியங்களையும் தரக்கூடியது பிரதோஷ விரதம்.

நமசிவாயம் சொல்லுவோம். நல்லனவற்றையெல்லாம் பெறுவோம். நமசிவாயம்... நமசிவாயம்... நமசிவாயம்!

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com