ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பவித்ர உற்சவத்தையொட்டி நம்பெருமாள் தீர்த்தவாரி

நம்பெருமாளுக்கு பதிலாக தீர்த்தபேரர் புனித நீராடினார்.நம்பெருமாள் கரையில் நின்றவாறு தீர்த்தபேரர் நீராடுவதை கண்டருளினார்.
நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளியபோது எடுத்த படம்.
நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளியபோது எடுத்த படம்.
Published on

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் பவித்ர உற்சவம் எனப்படும் நூலிழைத் திருநாள் 9 நாட்கள் நடத்தப்படும்.. இந்த ஆண்டுக்கான பவித்ரஉற்சவம் கடந்த 6-ந் தேதி தொடங்கியது. இந்த உற்சவத்தை முன்னிட்டு உற்சவர் நம்பெருமாள் தினமும் மாலையில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு தங்கக்கொடிமரத்தின் அருகில் உள்ள பவித்ர உற்சவ மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பவித்ரஉற்சவத்தின் 7-ம் நாளான கடந்த 12-ந்தேதி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் கோவில் திருக்கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளினார். பின்னர் திருவந்திகாப்பு கண்டருளி இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். விழாவின் நிறைவு நாளான நேற்று நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு சந்திரபுஷ்கரணி குளத்திற்கு தீர்த்த பேரருடன் வந்து சேர்ந்தார். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

பின்னர் சந்திரபுஷ்கரணியில் காலை 10 மணியளவில் நம்பெருமாளுக்கு பதிலாக தீர்த்தபேரர் புனித நீராடினார். நம்பெருமாள் கரையில் நின்றவாறு தீர்த்தபேரர் நீராடுவதை கண்டருளினார். இந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

நம்பெருமாள் சந்திரபுஷ்கரணியில் இருந்து புறப்பட்டு பவித்ர உற்சவ மண்டபத்திற்கு காலை 10.30 மணிக்கு வந்து சேர்ந்தார். அங்கு பகல் 1 மணி முதல் மதியம் 3 மணி வரை திருமஞ்சனம் கண்டருளினார். பின்னர் மதியம் 3.30 மணி முதல் இரவு 7.45 மணி வரை பொதுஜனசேவை நடைபெற்றது. பவித்ரஉற்சவ மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணைஆணையர் மாரிமுத்து மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com