குலசையில் கோலாகலமாக நடந்த சூரசம்ஹாரம்: விண்ணதிர்ந்த பக்தர்களின் 'ஓம் காளி, ஜெய் காளி' கோஷம்

முத்தாரம்மன் கோவிலில் சூரசம்ஹாரம் விழா கோலாகலமாக நடைபெற்றது. காலை முதல் மதியம் வரையிலும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
குலசையில் கோலாகலமாக நடந்த சூரசம்ஹாரம்: விண்ணதிர்ந்த பக்தர்களின் 'ஓம் காளி, ஜெய் காளி' கோஷம்
Published on

குலசேகரன்பட்டினம்:

இந்தியாவில் தசரா பெருந்திருவிழா மைசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில்தான் பிரசித்தியாக கொண்டாடப்படுகிறது.

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து முத்தாரம்மன் கோவிலில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில், வெவ்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தினமும் மாலையில் சமய சொற்பொழிவு, திருமுறை இன்னிசை, பரதநாட்டியம், வில்லிசை, இன்னிசை நிகழ்ச்சி போன்றவை நடந்தது.

இந்நிலையில், பத்தாவது நாளில் முத்தாரம்மன் கோவில் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று இரவு கோலாகலமாக நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனையொட்டி, காலை முதல் மதியம் வரையிலும் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

இரவு 11 மணி அளவில் அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. நள்ளிரவு 12 மணி அளவில் அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவிலுக்கு முன் எழுந்தருளினார். அப்போது காளி வேடம் அணிந்த பக்தர்களும் அம்மனை பின்தொடர்ந்து வந்தனர். சூரசம்ஹாரத்தைக் காண்பதற்காக கடற்கரையில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர்.

முதலில் ஆணவமே உருவான மகிஷாசூரன் 3 முறை அம்மனை வலம்வந்து போரிட தயாரானான். அவனை அம்மன் சூலாயுதத்தால் வதம் செய்தார். அதன்பின் சிங்க முகமாக உருமாறிய மகிஷாசூரன் மீண்டும் உக்கிரத்துடன் போரிடுவதற்காக அம்மனை 3 முறை சுற்றி வந்தான். அவனையும் அம்மன் சூலாயுதம் கொண்டு அழித்தார்.

தொடா்ந்து எருமை முகமாக உருமாறிய மகிஷாசூரன் மறுபடியும் பெருங்கோபத்துடன் அம்மனுடன் போர் புரிய வந்தான். அவனையும் சூலாயுதத்தால் அம்மன் சம்ஹாரம் செய்தார். அதன்பிறகு சேவலாக உருமாறி போரிட்ட மகிஷாசூரனையும் அன்னை சூலாயுதத்தால் வதம் செய்தார்.

அப்போது அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் 'ஓம் காளி, ஜெய் காளி' என்று விண்ணதிர பக்தி கோஷங்களை முழங்கி அம்மனை வழிபட்டனர்.

குலசேகரன்பட்டினம் நகர் முழுவதும் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com