சுசீந்திரம் கோவிலில் நிறை புத்தரிசி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது

தைப்பூசத்தை முன்னிட்டு காலை, மாலை வேளையில் வாகன பவனி நடக்கிறது.நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
சுசீந்திரம் கோவிலில் நிறை புத்தரிசி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது
Published on

சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் நிறை புத்தரிசி பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான நிறை புத்தரிசி பூஜை நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி கோவிலுக்கு சொந்தமான வயல்களில் இருந்து நெற்கதிர்களை அறுவடை செய்து சன்னதி தெருவில் உள்ள விநாயகர் கோவிலுக்கு கொண்டு வருவார்கள்.

பின்னர் அங்கிருந்து அதிகாலை 5.30 மணிக்கு மேளதாளத்துடன் நெற்கதிர்களை ஊர்வலமாக கொண்டு வந்து தாணுமாலய சாமி சன்னதியில் வைப்பார்கள். அதைத்தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடு செய்த பின்னர் அந்த நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். பக்தர்கள் அந்த நெற்கதிர்களை தங்களது வீடுகளுக்கு கொண்டு செல்வார்கள். நெற்கதிர்கள் செழித்து வளர்வது போன்று தங்கள் வாழ்வும் செழிப்படையும் என்பது மக்களின் நம்பிக்கையாகும்.

இதேபோன்று கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், பூதப்பாண்டி பூதலிங்க சாமி கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நிறை புத்தரிசி பூஜை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

அன்றைய தினம் தைப்பூசம் வருவதையொட்டி சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் காலை மற்றும் மாலை வேளையில் வாகனபவனியும் நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com