சக்தி வழிபாடும் பெண் தெய்வ வழிபாட்டின் முக்கியத்துவமும்

குடும்பத்தைக் காக்கும் தாயை போல, ஊரையும் உலகையும் காக்கும் தாயாக மாரியம்மன் பார்க்கப்படுகிறாள்.
Mariamman
Published on

வழிபாடு

தமிழ் பண்பாட்டில் பெண் தெய்வ வழிபாடு என்பது சங்க காலம் தொட்டே மிக உயரிய இடத்தில் இருந்து வருகிறது. தொல்காப்பியம் குறிப்பிடும் வீரத்தின் அடையாளமான கொற்றவை வழிபாட்டின் மருவிய வடிவமே இன்றைய மாரியம்மன் வழிபாடு ஆகும். மாரியம்மன் வழிபாடு என்பது சாதி, மத பேதங்களை கடந்து ஒட்டுமொத்த சமுதாயத்தையும் ஒன்றிணைக்கும் ஒரு சமூகக் கருவியாக செயல்படுகிறது. சமயபுரத்தில் நடக்கும் பூச்சொரிதல் விழா மற்றும் பெருந்திரு விழாக்களில் சமுதாயத்தின் அனைத்துப் பிரிவு மக்களும் சம உரிமையோடு பங்கேற்றுப் பக்தி பெருக்கோடு கொண்டாடுகின்றனர்.

வேப்பிலை

இயற்கையையும், பெண்மையையும் ஒன்றாக கருதிய தமிழர்கள், உலகை இயக்கும் பேராற்றலைச் 'சக்தி' என்று பெண் வடிவில் போற்றி வணங்கினர். குடும்பத்தைக் காக்கும் தாயை போல, ஊரையும் உலகையும் காக்கும் தாயாக மாரியம்மன் பார்க்கப்படுகிறாள். வேப்பிலை ஆடை உடுத்துதல், அலகு குத்துதல், அக்னிச்சட்டி ஏந்துதல் போன்ற சடங்குகள் மக்களின் மனவலிமையையும், உடலை வருத்தி பிறருக்காக பிரார்த்தனை செய்யும் தியாக உணர்வையும் வளர்த்து சமூக நல்லிணக்கத்தை வழிநடத்துகின்றன.

பூச்சொரிதல், பச்சைப் பட்டினி விரதம்

சமயபுரம் மாரியம்மன் கோவிலின் மிக முக்கிய வரலாற்று சிறப்புமிக்க திருவிழா மாசி மாதத்தில் நடைபெறும் பூச்சொரிதல் விழா மற்றும் அம்மனின் பச்சைப் பட்டினி விரதம் ஆகும். உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் ஏற்படும் அம்மை போன்ற வெப்ப நோய்களையும் இன்னல்களையும் நீக்க அன்னை மாரியம்மன் தானே முன்வந்து உலக மக்களுக்காகப் பச்சைப் பட்டினி விரதம் மேற்கொள்கிறாள்.

மாசி மாதம் கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாதம் கடைசி ஞாயிறு வரை மொத்தம் 28 நாட்கள் அம்மன் இந்த விரதத்தை கடைப்பிடிக்கிறாள். இந்த நாள்களில் அம்மனுக்கு எந்தவிதமான சமைத்த உணவுகளும் நைவேத்தியமாக படைக்கப்படுவது இல்லை. துள்ளு மாவு, இளநீர், கரும்புச்சாறு மட்டுமே படைக்கப்படும்.

வைஷ்ணவி தேவி

ஸ்ரீரங்கம் ரெங்கநாதரின் கோவிலில் வைஷ்ணவி தேவியாக தோன்றி இன்று சமயபுரத்தில் அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகியாக கோடி கணக்கான பக்தர்களின் குலதெய்வமாக விளங்கும் சமயபுரத்தாள் வரலாறு பக்தி நெறியின் உன்னத அடையாளம் ஆகும். சாதி மத பேதமின்றி தன்னை நாடி வரும் பக்தர்களின் குறைகளை சரியான சமயத்தில் தீர்த்து வைக்கும் காவல்தெய்வமாக சமயபுரம் மாரியம்மன் திகழ்கிறாள் என்பது மறுக்க முடியாத வரலாற்று உண்மை ஆகும்.

தங்க குடம் சமர்ப்பித்த திருவிதாங்கூர் சமஸ்தானம்

சமயபுரம் மாரியம்மனின் கீர்த்தி தமிழக எல்லையைக் கடந்து கேரளா வரையிலும் பரவி இருந்தது என்பதற்கு வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. குறிப்பாக, திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட மன்னர்கள் சமயபுரம் மாரியம்மனை தங்களின் குலதெய்வத்திற்கு இணையான உக்கிர சக்தியாக மதித்து வந்தனர். ஒரு முறை, திரு விதாங்கூர் அரச குடும்பத்தை சேர்ந்த முக்கியப் பிரமுகர் ஒருவர் கடுமையான அம்மை நோயால் பாதிக்கப்பட்டு, எந்த மருத்துவத்தாலும் குணமாகவில்லை.

சமயபுரம்

பின்னர், சமயபுரம் அம்மனை வேண்டிக்கொண்டு, இக்கோவிலின் உறை மருந்துத் தீர்த்தத்தை அருந்திய பின் நோய் முழுமையாக குணமடைந்தது. இதற்கு நன்றிக் கடனாக, திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் சார்பில் விலையுயர்ந்த நவரத்தின ஆபரணங்களும், பூஜைகளுக்கான பிரம்மாண்டமான தங்கக்குடமும் அம்மனுக்குக் காணிக்கை யாகச் சமர்ப்பிக்கப்பட்டன. இந்தத்தங்கக் குடம் இன்றும் கோவிலின் முக்கிய வழிபாட்டு காலங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com