சபரிமலை: ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு தீபாராதனை

மேளதாளம் முழங்க பக்தர்கள் தலைச்சுமையாக சுமந்து வந்தனர்.பக்தர்கள் `சாமியே சரணம் ஐயப்பா’ என பக்தி கோஷம் முழங்கினர்.
சபரிமலை: ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு தீபாராதனை
Published on

சபரிமலை:

மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16-ந்தேதி திறக்கப்பட்டது. இதையடுத்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி வந்து அய்யப்பனை தரிசனம் செய்து வருகிறார்கள்.

சபரிமலையில் இந்த ஆண்டின் மண்டல பூஜை இன்று (புதன்கிழமை) நடக்கிறது. அப்போது திருவிதாங்கூர் மன்னராக இருந்த சித்திரை திருநாள் மகாராஜா வழங்கிய 450 பவுன் எடையுள்ள தங்க அங்கி ஐயப்பனுக்கு அணிவிப்பது வழக்கம்.

இந்த தங்க அங்கி பத்தனம்திட்டா மாவட்டம் ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்த தங்க அங்கி கடந்த 23-ந்தேதி சபரிமலைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக புறப்பட்டது. இந்த ஊர்வலம் நேற்று பம்பை கணபதி கோவிலை வந்தடைந்தது. அங்கிருந்து தங்க அங்கியை மேளதாளம் முழங்க பக்தர்கள் தலைச்சுமையாக சுமந்து வந்தனர். தங்க அங்கி மாலை 5.15 மணிக்கு சரம்குத்தி வந்தடைந்தது.

அப்போது திருவிதாங்கூர் தேவஸ்தான ஊழியர்கள் சார்பில் மேளதாளம் முழங்க பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து மாலை 6.15 மணிக்கு சன்னிதானம் வந்தடைந்த தங்க அங்கியை திருவிதாங்கூர் தேவஸ்தான மந்திரி ராதாகிருஷ்ணன் தலைமையில் தலைவர் பிரசாந்த், உறுப்பினர்கள் பெற்றுக்கொண்டு தந்திரி மற்றும் மேல்சாந்தியிடம் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து தங்க அங்கி 18-ம் படி வழியாக கருவறைக்குள் எடுத்து செல்லப்பட்டு அய்யப்பனுக்கு அணிவிக்கப்பட்டது.

பின்னர் மாலை 6.40 மணியளவில் மண்டல பூஜையின் முன் நிகழ்வாக சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அப்போது சன்னிதானத்தில் கூடி இருந்த திரளான பக்தர்கள் `சாமியே சரணம் ஐயப்பா' என பக்தி கோஷம் முழங்கினர். தொடர்ந்து வழக்கமான பூஜைகள் மற்றும் வழிபாடுகளுக்கு பின்னர் இரவு 11 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்பட்டது.

சபரிமலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும். தொடர்ந்து நடைபெறும் வழக்கமான பூஜைகளுடன் காலை 9.45 மணி வரை நெய்யபிஷேகம் போன்றவை நடைபெறும்.

தொடர்ந்து காலை 10.30 மணி முதல் பகல் 11.30 மணி வரையிலான முகூர்த்த வேளையில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் மண்டல பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறும். பின்னர் இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்பட்டு 41 நாட்கள் நடைபெற்ற மண்டல கால பூஜை நிறைவு பெறுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com