

நாகதோஷம் தீர்க்கும் புகழ்பெற்ற பரிகாரத் தலமாகவும், புண்ணிய ஸ்தலமாகவும் நாகர்கோவில் நாகராஜா கோவில் விளங்கி வருகிறது. இக்கோவிலில் உள்ள நாகர் சிலைகளைத் தரிசித்து வழிபட்டால் தோஷங்கள் நீங்கும், தடையின்றி திருமணங்கள் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகவும் ஐதீகமாகவும் உள்ளது.
இதனால் குமரி மாவட்டம் மட்டுமின்றி, வெளி மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். தற்போது ஆடி மாதம் பிறந்து உள்ளதை முன்னிட்டு, கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் மற்றும் நாகராஜரை வழிபட பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.
இந்த நிலையில், விடுமுறை (ஞாயிற்றுக்கிழமை) நாளான இன்று நாகராஜா கோவிலில் வழக்கத்தை விட மிகவும் அதிகமான பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மூலவர் நாகராஜனுக்கு சிறப்பு அபிஷேகங்களும் தீபா ராதனைகளும் நடைபெற்றன. காலை வேளையிலேயே கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.
கோவில் வளாகத்தில் மரத்தடி மற்றும் சுவர்களில் அமைக்கப்பட்டுள்ள நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபடுவதற்காக பெண்கள் அதிகளவில் வருகை தந்திருந்தனர். பெண்கள் நீண்ட வரிசையில் பொறுமையாக நின்று நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றியும், மஞ்சள் பொடி தூவியும், குங்குமம் இட்டும் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். துர்க்கை அம்மன் கோவில் முன்பு பெண்கள் விளக்கேற்றியும் வழிபட்டனர்.
ஆடி மாத ஞாயிற்றுக்கிழமையையொட்டி பக்தர்களின் பாதுகாப்பிற்காகவும், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும் கோவில் நிர்வாகம் மற்றும் போலீசார் உரிய ஏற்பாடுகளை செய்திருந்தனர்.