கார்த்திகை பிரம்மோற்சவ விழா: கல்ப விருட்ச, அனுமந்த வாகனங்களில் பத்மாவதி தாயார் வீதிஉலா

கல்ப விருட்ச வாகன வீதிஉலா.கார்த்திகை பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது.
கார்த்திகை பிரம்மோற்சவ விழா: கல்ப விருட்ச, அனுமந்த வாகனங்களில் பத்மாவதி தாயார் வீதிஉலா
Published on

திருப்பதி:

திருச்சானூர் கோவில் கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின் 4-வது நாளான நேற்று காலை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு அனுமந்த வாகன வீதிஉலா நடந்தது.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று காலை கல்ப விருட்ச வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் பத்மாவதி தாயார் 'ராஜமன்னார்' அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

வாகன வீதி உலாவுக்கு முன்னால் எஸ்.வி. இசை மற்றும் நடனக் கல்லூரி மாணவ-மாணவிகள் ஆடிய 'கோயா நடனம்' பக்தர்களை கவர்ந்தது. இதுதவிர லட்சுமி கூடம், மேள வின்யாசம், கோபிகா நாட்டியம், மயூர நிருத்தியம், ரிப்பன் நடனம் ஆகியவை பிரம்மாண்டத்தை மேம்படுத்தியது. மேலும் கோலாட்டம், பரத நாட்டியம், நாட்டுப்புற நடன கலை நிகழ்ச்சிகள் நடந்தன. கேரள செண்டை மேளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. வாகன வீதிஉலாவுக்கு முன்னால் 3 ஆன்மிக நூல்கள் வெளியிடப்பட்டன.

அதைத்தொடர்ந்து இரவு அனுமந்த வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

அனுமந்த வாகன வீதிஉலா முன்னால் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அவை பக்தர்களை கவர்ந்தன. அதில் பத்ம நிருத்யம், தீப நிருத்யம், புராணக் கதாபாத்திரங்களின் சித்தரிப்பு மற்றும் அன்னமாச்சாரியார் சங்கீர்த்தனங்களுக்கான நடனம் ஆகியவை குறிப்பிடத் தக்கவை.

மேலும் ராமச்சந்திரா புஷ்கரணி, ஆஸ்தான மண்டபம், மகதி, அன்னமாச்சாரியார் கலையரங்கம் ஆகிய இடங்களில் நடந்த பக்தி கலாசார நிகழ்ச்சிகள் பக்தர்களை கவர்ந்தன.

வாகன வீதிஉலாவுக்கு முன்னால் பெரிய, சின்ன ஜீயர் சுவாமிகள், தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன், கோவில் துணை அதிகாரி கோவிந்தராஜன், பறக்கும் படை அதிகாரி பாலிரெட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின் 5-வதுநாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை பல்லக்கு வாகன வீதிஉலா (மோகினி அலங்காரம்), மாலை வசந்தோற்சவம், இரவு யானை வாகன வீதிஉலா நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com