கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா இன்று நடக்கிறது

பகல் 12 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது.அம்மனுக்கு பல வகையான மலர்களால் புஷ்பாபிஷேகம் நடக்கிறது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா இன்று நடக்கிறது
Published on

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா 5-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜையும், விஸ்வரூப தரிசனமும், அம்மனுக்கு அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது.

ஸ்ரீபலி பூஜையும், 10 மணிக்கு அம்மனுக்கு எண்ணெய், பால், தயிர், நெய் பன்னீர், இளநீர், தேன், களபம், சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகமும் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து அம்மனுக்கு தங்க ஆபரணங்கள் மற்றும் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும், 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனையும், பகல் 12 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது.

மாலை 6.30 மணிக்கு சாயராட்சை தீபாராதனையும், அம்மனுக்கு பல வகையான மலர்களால் புஷ்பாபிஷேகமும், இரவு 8 மணிக்கு அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்தருள செய்து கோவிலின் உள்பிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை வலம் வர செய்யும் நிகழ்ச்சியும் நடக்கிறது. பின்னர் அம்மனை வெள்ளி சிம்மாசனத்தில் அமரச்செய்து தாலாட்டு நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் தலைமையில் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com