வேண்டுதலை நிறைவேற்றும் ஈரோடு பெரிய மாரியம்மன்

கம்பங்கள் கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் விடப்படும்.
Erode Periyamariamman
Published on

ஈரோடு அம்மன் கோவில்

ஈரோடு மாநகரில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் மாநகராட்சி அலுவலகம் எதிரே கம்பீரமாக அமைந்துள்ளது. கொங்கு சோழர்களால் 1200 ஆண்டுகளுக்கு முன்பு இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோவிலின் வகையறா கோவிலாக சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் கோவில் உள்ளது. ஈரோடு மாநகரில் பல்வேறு அம்மன் கோவில்கள் இருந்தாலும் அனைத்து அம்மன் கோவில்களுக்கும் தலைமை தெய்வமாக ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது.

மாவிளக்கு

ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதமான பங்குனியில் (மார்ச், ஏப்ரல்) தேர் குண்டம் திருவிழா பிரம்மாண்டமாக நடைபெறும். கம்பம் நடுதல், மாவிளக்கு வழிபாடு, கரகம் எடுத்தல், பொங்கல் வைத்தல், தேரோட்டம், மஞ்சள் நீராட்டு என 20 நாட்கள் கோவிலில் திருவிழா களைக்கட்டும்.

ஆடி மாத வழிபாடு

ஈரோடு மாநகர் மக்களை காக்கும் காவல் தெய்வமாக பெரிய மாரியம்மன் விளங்கி வருகிறாள். பொதுவாக ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பார்கள். இதனால் ஆடி மாதம் முழுவதும் பெரிய மாரியம்மனை வணங்குவதற்காக ஈரோடு மட்டுமன்றி சேலம், திருப்பூர், கோவை, நாமக்கல், திருச்செங்கோடு, பள்ளிபாளையம் போன்ற பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான பெண்கள் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டு செல்வார்கள்.

பெரிய மாரியம்மன்

திருமணமாகாத பெண்கள் பெரிய மாரியம்மன் கோவிலில் மஞ்சள் வைத்து வழிபட்டு பக்தர்களுக்கு வழங்கினால் அவருக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். இதனால் ஆடி மாதம் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் இளம் பெண்கள் அதிக அளவில் மஞ்சள் வைத்து அம்மனை வழிபட்டு செல்வதை காண முடியும். இதைப்போல் இங்கு வரும் பெண்கள் அம்மனை கூழ் வைத்து வழிபடுவதும் தனி சிறப்பாகும். வேண்டுதலை நிறைவேற்றும் பெரிய மாரியம்மன் என்பதால் இந்த கோவில்களில் சாதாரண நாட்களில் இருக்கும் கூட்டத்தை விட ஆடி மாதம் முழுவதும் வரும் கூட்டம் அதிகம்.

சின்ன மாரியம்மன்

பெரிய மாரியம்மன் கோவிலின் வகையறா கோவில்களில் ஒன்றான சின்ன மாரியம்மன் கோவிலில் மிக முக்கியமான பண்டிகை தேர் திருவிழாவாகும். பங்குனி மாதத்தில் நடைபெறும் தேர் திருவிழாவானது மிகவும் பிரசித்தி பெற்றது. தேர்த்திருவிழாவன்று தேர் மாநகரின் முக்கிய வீதிகள் முழுவதும் இழுத்து வரப்படுகிறது.

அபிஷேகம்

மேலும் ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெறும். குறிப்பாக ஆடி மாதம் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இங்கு கூட்டம் அதிகமாக இருக்கும். பெண்கள் அம்மனுக்கு கூழ் வைத்து வழிபட்டு அதை பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்குவார்கள். ஒரு வேண்டுதலை மனதில் வைத்து அம்மனை நினைத்து வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும்.

குழந்தை பாக்கியம்

இதைப்போல் திருமணமான பெண்கள் குழந்தை பாக்கியம் பெற வளையல்கள் வைத்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். இதனால் இங்கு ஏராளமான திருமணமான பெண்கள் குழந்தை பாக்கியம் வேண்டி வளையல்கள் வைத்து வழிபட்டு செல்வார்கள். குழந்தை நல்லபடியாக பிறந்தால் அந்த குழந்தையை கோவிலுக்கு அழைத்து வந்து வழிபடுவது சிறப்பு. இவ்வாறு செய்தால் நோய் நொடியின்றி வாழலாம்.

காரை வாய்க்கால் மாரியம்மன்

பெரிய மாரியம்மன் கோவில் வகையறா கோவில்களில் மூன்றாவது கோவில் காரை வாய்க்கால் மாரியம்மன். கோவிலை சுற்றி வாய்க்கால் செல்வதால் இந்த இடம் குளுமையாக இருக்கும். இந்த கோவிலில் முக்கிய பண்டிகை பங்குனி மாதத்தில் நடைபெறும் குண்டம் திருவிழாவாகும்.

குண்டம் திருவிழா

குண்டம் திருவிழாவுக்காக ஈரோடு மட்டுமல்லாமல் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பெண்கள், ஆண்கள் விரதம் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் குண்டம் இறங்குவார்கள். இவ்வாறு குண்டம் இறங்கினால் நாம் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.

மூன்று கால பூஜை

இவ்வாறு சிறப்புமிக்க இந்த கோவிலில் ஆடி மாதம் முழுவதும் காரைவாய்க்கால் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலிப்பாள். மூன்று வகையறா கோவில்களிலும் தினமும் மூன்று கால பூஜை நடைபெற்று வருகிறது. காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலிலும் பெண்கள் கூழ் வைத்து வழிபடுவார்கள். மூன்று வகையறா கோவில்களிலும் தினமும் காலை 10 மணிக்கு காலை பூஜையும், 12 மணிக்கு உச்சிக்கால பூஜையும், மாலை 6 மணிக்கு மூன்றாம் கால பூஜையும் நடைபெறுகிறது.

கம்பம் எடுக்கும் நிகழ்ச்சி

ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா உலக பிரசித்தி பெற்றதாகும். இந்த திருவிழாவில் 10 லட்சம் பக்தர்கள் திரள்வார்கள். குறிப்பாக கம்பம் எடுக்கும் நிகழ்ச்சியில் ஒரு லட்சம் பக்தர்கள் கூடுவார்கள். மட்டாலம்மனுக்கு முதல் பூஜை செய்த பிறகே கோவிலில் திருவிழா தொடங்கும்.

கோவில்கள்

குறிப்பாக கோவில்களில் நடப்பட்ட கம்பங்கள் முக்கிய வீதி வழியாக எடுத்து காவிரி ஆற்றில் விடப்படுவது தனி சிறப்பாகும். பின்னர் சின்ன மாரியம்மன் கோவிலிலும் காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலும் கம்பங்கள் எடுக்கப்பட்டு நகரின் முக்கிய வீதிகளில் உலா வரும். அப்போது பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் ஊற்றி வழிபடுவார்கள். அன்று ஈரோடு நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும். பின்னர் கம்பங்கள் கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் விடப்படும்.

பக்தர்கள்

கோடை காலத்தில் நடைபெறும் இந்த திருவிழாவையட்டி நடப்படும் கம்பத்துக்கு பெண் பக்தர்கள் தினமும் புனிதநீர் ஊற்றி வணங்கி செல்வார்கள். கம்பத்துக்கு தண்ணீர் விடுவது அம்மனுக்கு அபிஷேகம் செய்வதற்கு ஈடானதாக கருதப்படுகிறது. இவ்வாறு கம்பத்துக்கு தண்ணீர் விட்டால் அம்மன் மனம் குளிர்ந்து கேட்கும் வரங்களை தருவாள் என்பது பக்தர்கள் உணர்ந்த உண்மையாகும்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com