சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று ஆருத்ரா தரிசனம்- ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.தேர் மீண்டும் வடக்கு வீதி, கீழ வீதி வழியாக நிலையை வந்தடைந்தது.
ஆருத்ரா தரிசனத்தை காண திரண்டிருந்த பக்தர்கள் கூட்டத்தை படத்தில் காணலாம்.
ஆருத்ரா தரிசனத்தை காண திரண்டிருந்த பக்தர்கள் கூட்டத்தை படத்தில் காணலாம்.
Published on

உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாக விளங்கி வருகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் 6 மகா அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம்.

இதில் ஆனி மாதம் நடக்கும் ஆனி திருமஞ்சன விழாவும், மார்கழி மாதம் நடக்கும் ஆருத்ரா தரிசன விழாவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஏனெனில், இந்த 2 உற்சவத்தின் போதும் மூலவராகிய ஆனந்த நடராஜமூர்த்தி, சிவகாமசுந்தரி அம்பாளுடன் உற்சவராக தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசன விழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவரும் நிகழ்ச்சி நடைபெற்று, 8-ந்தேதி தெருவடைச்சான் உற்சவம் நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. தேர் மீண்டும் வடக்கு வீதி, கீழ வீதி வழியாக நிலையை வந்தடைந்தது.

பின்னர் தேரில் இருந்து சுவாமிகள் இறக்கப்பட்டு, கோவிலில் உள்ள ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் வைக்கப்பட்டது. அங்கு நடராஜருக்கு ஏக கால லட்சார்ச்சனை நடந்தது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவையொட்டி இன்று (திங்கட்கிழமை) ஆருத்ரா தரிசனம் நடந்தது. இதையொட்டி அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்ச மூர்த்திகள் வீதிஉலா வந்ததும் பிற்பகல் 3 மணிக்கு மேல் 3.30 மணிக்குள் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளியுள்ள நடராஜர்-சிவகாம சுந்தரி அம்மன் புறப்பட்டு நடன பந்தலில் நடனமாடி ஆருத்ரா தரிசன காட்சி அளித்து சித்சபை பிரவசேம் செய்கின்றனர். இந்த தரிசனத்தை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிவபக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர். இதனால் சிதம்பரம் நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டு இருந்தது.

நாளை முத்துப்பல்லக்கு வீதிஉலாவும், நாளை மறுநாள் (புதன்கிழமை) புதுப்பிக்கப்பட்ட ஞானபிரகாசர் தெப்பக்குளத்தில் 22 ஆண்டுகளுக்கு பிறகு தெப்ப உற்சவமும் நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. திஷாமித்தல், கடலூர் மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆகியோர் மேற்பார்வையில் சிதம்பரம் துணைபோலீஸ் சூப்பிரண்டு அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் தலைமையில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com