தஞ்சை பெரிய கோவிலில் ஆருத்ரா தரிசனம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய, சிவகாமசுந்தரியுடன், நடராஜபெருமான் கோவிலில் உள் பிரகாரத்தில் வலம் வந்தனர். வழக்கமாக சிவகங்கை குளத்தில் நடைபெறும் தீர்த்தவாரியானது, இந்த ஆண்டு கோவில் உள்பிரகாரத்தில் நடந்தது.
தஞ்சை பெரியகோவில் உள் பிரகாரத்தில் நடராஜர் உலா வந்ததையும் திரளான பக்தர்கள் தரிசனம் செய்ததையும் காணலாம்.
தஞ்சை பெரியகோவில் உள் பிரகாரத்தில் நடராஜர் உலா வந்ததையும் திரளான பக்தர்கள் தரிசனம் செய்ததையும் காணலாம்.
Published on

தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழும் இந்த கோவில் ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. இங்கு பெருவுடையார், பெரியநாயகி அம்மன், விநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், வராகி அம்மன் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன.

இங்கு சிவகாமசுந்தரி சமேத நடராஜபெருமான், தனி சன்னதியில் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். நடராஜருக்கு ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திர தினத்தன்று ஆருத்ரா தரிசனம் நடந்து வருகிறது. அதைபோல் இந்தாண்டு ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, ஐம்பொன்னாலான நடராஜபெருமானுக்கு நேற்றுமுன்தினம் இரவு விபூதி, பால், தயிர், பழங்கள், மஞ்சள், திரவிய பொடி, சந்தனம் உள்ளிட்ட மங்கள பொருட்களால் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து, கொரோனா விதிமுறையால், நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்து தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய, சிவகாமசுந்தரியுடன், நடராஜபெருமான் கோவிலில் உள் பிரகாரத்தில் வலம் வந்தனர். வழக்கமாக சிவகங்கை குளத்தில் நடைபெறும் தீர்த்தவாரியானது, இந்த ஆண்டு கோவில் உள்பிரகாரத்தில் நடந்தது.

வழக்கமாக சுவாமி வீதி உலா 4 ராஜவீதிகளிலும் நடைபெறும். கொரோனா விதிமுறை காரணமாக இந்த ஆண்டும் கடந்த ஆண்டைப்போல கோவில் பிரகாரத்தில் நடைபெற்றது. பின்னர், மும்மாரி மழை பொழிந்து விளைச்சல் நல்ல முறையில் இருக்க வேண்டும் என்று வேண்டி நெல்மணிகள் சாமி மீது தூவப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் தெற்கு கோபுர வாசலில் உள்ள ஆட்கொண்டேஸ்வரர் சுவாமிக்கு மார்கழி மாத திருவாதிரையை முன்னிட்டு விழா நடைபெற்றது. நேற்று இரவு ஆட்கொண்டேஸ்வரர் சுவாமிக்கு பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள் போன்றவற்றால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிவகாமசுந்தரி, நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் சன்னதியில் இருந்து புறப்பட்டு ஆட்கொண்டார் சன்னதி வந்தடைந்தனர். பின்னர் புஷ்ய மண்டப படித்துறை காவிரி ஆற்றில் சூலபாணிக்கு பால், தேன், சந்தனம் போன்றவற்றால் அபிஷேகம் செய்து தீர்த்தவாரி நடைபெற்றது.

பின்னர் நடராஜருக்கும் ஆட்கொண்டேஸ்வரருக்கும் ஒரே நேரத்தில் சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டு பொம்மை பூப்போடும் உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து வீதிஉலா ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com