ஆடி பவுர்ணமி: திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. கோபுர நுழைவு வாயில் வழியாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
ஆடி பவுர்ணமி: திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
Published on

திருவண்ணாமலை:

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் இக்கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

ஆடி மாதத்திற்கான பவுர்ணமி நேற்று மாலை 6.05 மணி அளவில் தொடங்கியது. பவுர்ணமியை முன்னிட்டு நேற்று அதிகாலை முதலே பல்வேறு பகுதியில் இருந்து திருவண்ணாமலைக்கு பக்தர்கள் வருகை தர தொடங்கினர்.

கிரிவலம் செல்ல உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்தனர். குறிப்பாக ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் வந்தனர். காலையில் குறைந்த அளவிலான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

பவுர்ணமி மாலையில் தொடங்கியதால் பெரும்பாலான பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு கிரிவலம் செல்லலாம் என்று வரிசையில் நின்றனர். இதனால் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

பக்தர்கள் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மதியம் வரை கோவிலில் ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுர நுழைவு வாயில் வழியாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். கோவிலில் சாமி தரிசனம் 4 மணி நேரத்திற்கு மேலானதாக கூறப்படுகிறது.

கோவிலில் பக்தர்கள் விரைந்து சாமி தரிசனம் செய்யும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. மேலும் கோவிலுக்கு வெளியில் மட்டுமின்றி கோவில் உட்புறமும் பல்வேறு வரிசைகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய சென்றனர்.

முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கைக்குழந்தையுடன் வந்த பெண்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு விரைந்து சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

மதியத்திற்கு மேல் ஏராளமான பக்தர்கள் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் திருவண்ணாமலைக்கு வருகை தந்தனர். பகலில் பக்தர்கள் பலர் தனித்தனியாக கிரிவலம் சென்ற வண்ணம் காணப்பட்டாலும் மாலையில் இருந்து கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது.

இரவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கிரிவலம் சென்ற பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது. பவுர்ணமி கிரிவலமானது இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.48 மணியளவில் நிறைவடைகிறது. அதனால் பக்தர்கள் தொடர்ந்து விடிய, விடிய கிரிவலம் சென்றனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் இன்றும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பவுர்ணமியை முன்னிட்டு போலீசார் திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப்பாதையில் தொடர்ந்து ரோந்து பணியிலும், போக்குவரத்தை சீர் செய்யும் பணியிலும் ஈடுபட்டனர். 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களும் போலீசாருடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com