

ஆடி மாதத்தின் 18-ம் நாள் ஆடிப்பெருக்கு என்று கொண்டாடப்படுகிறது. இதை பதினெட்டாம் பெருக்கு என்றும், ஆடிப்பதினெட்டு என்றும் அழைக்கிறோம். பொதுவாக தமிழ் விழாக்கள் நாள்களின் எண்ணிக்கையை அடிப்படியாக கொண்டு கொண்டாடப்படுவதில்லை. ஆனால் இந்த ஆடிப்பெருக்கு விழா மட்டும் ஆடி மாதம் 18-வது நாள் என நாளின் அடிப்படையில் கொண்டாடப்படுகிறது.
நாடு செழிப்பாக இருக்க வேண்டுமானால், விவசாயம் செழிக்க வேண்டும். அந்த விவசாயம் செழிப்பதற்கு தேவையானது நீர். எனவே நீரைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில், நதிகள் அனைத்தும் புனிதம் மிக்கவை என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தனர். அவற்றுக்கு வருடத்தில் ஒருமுறை வழிபாடுகள் செய்யவும் அவர்கள் ஒரு ஏற்பாட்டை செய்தனர்.
அப்படி காவிரி நதித் தாயை வழிபடும் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றுதான், ஆடி மாதம் 18-ந் தேதி வரும் 'ஆடிப் பெருக்கு' நிகழ்வாகும். தென்மேற்கு பருவத்தில் பெய்யும் மழையினால் அனைத்து ஆறுகளும் நிரம்பி வழியும். இதையே ஆற்றுப்பெருக்கு என்பர். இதனால் உழவர்கள் நம்பிக்கையுடன் விதை விதைப்பர்.
இந்த சமயத்தில் நெல், கரும்பு போன்றவற்றை விதைத்தால் தான், தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். இதற்காக நதிகளை தெய்வமாக கருதி போற்றி மகிழ்ந்து, பூஜைகள் செய்து, பின் உழவு வேலையை தொடங்குகின்றனர். இதனால் தான் 'ஆடிப்பட்டம் தேடி விதை' என்ற பழமொழியும் உருவானது.
இந்த ஆடிப்பெருக்கு விழா தமிழ் பண்பாட்டின் சிறப்புவாய்ந்த பண்டிகைகளில் ஒன்றாகும். தமிழகத்தில் உள்ள அனைத்து ஆறு மற்றும் நதியின் கரையோரங்களிலும் நடத்தப்படுகிறது. இந்த விழா இப்போதும் காவிரிக் கரையோர மாவட்டங்களில் சிறப்பாக நடக்கிறது.
ஆடிப்பெருக்கு நாள் அன்று தொடங்கும் செயல்கள் எதுவாக இருந்தாலும் அவை இனிதாக நடைபெற்று முடியும் என்பது ஐதீகம். மக்கள் ஆற்றங்கரையில் கூடி நின்று ஆற்றுப்பெருக்கை கண்டுகளிப்பர். அன்றைய தினம் மக்கள் ஆற்றில் குளித்துவிட்டு, ஆற்றங்கரையில் பூஜை செய்வதற்கு ஒரு இடத்தை பிடித்துக்கொள்கின்றனர்.
அந்த இடத்தை பசு சாணத்தால் மெழுகி சுத்தம் செய்து, அதன்மேல் வாழை இலையை விரித்து அகல்விளக்கு ஏற்றி வைக்கின்றனர். மேலும் வழிபாட்டில் வெற்றிலை, பாக்கு, எலுமிச்சம், பழம் படைத்து, ஊதுவத்தி, கற்பூரம் காண்பித்து வழிபடுகின்றனர்.
தங்களுக்கு தடங்கல் இல்லாத விளைச்சல் வேண்டி நீருக்கு நன்றி செலுத்தும் விதமாக வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள். அதுமட்டுமல்லாமல் வீட்டில் பலவிதமான கலப்பு உணவுகளை தயார் செய்து வந்து, ஆற்றங்கரையில் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் மகிழ்ச்சியோடு உணவை உண்பார்கள்.
புதிதாக திருமணமானவர்கள், ஆடிப்பெருக்கு அன்று தங்கள் தாலியில் உள்ள மஞ்சள் கயிற்றை நீக்கி விட்டு, புதிய மஞ்சள் கயிற்றை தன் கணவன் கையால் கட்டிக்கொள்வர். இதன்மூலம் அவர்களது மாங்கல்ய பாக்கியம் நீடிக்கும் என்பதும், வாழ்க்கை சிறப்பாக அமையும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது. திருமணமாகாத பெண்களும் அம்மனை வேண்டி மஞ்சள் கயிறை கட்டிக் கொள்கிறார்கள். இவ்வாறு செய்வதன் மூலம் அடுத்த ஆடி மாதத்திற்குள் அவர்களுக்கு திருமணம் நிச்சயமாகும் என்கிறார்கள்.