

ஆடி மாதத்தில் தேடி வரும் திருவிழாக்களை நாம் கொண்டாடி மகிழ்ந்தால், கோடிப் புண்ணியமும், கோலாகல வாழ்க்கையும் கிடைக்கும். ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக போற்றப்படுகிறது. குறிப்பாக இந்த மாதத்தில் வரும் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வருவார்கள்.
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் தரிசனத்துக்கு குவிந்தனர். உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள அவருக்கு பூஜைகள் செய்து வழிபட்டனர். கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு கூழ் பிரசாதமாக வழங்கப்பட்டது.
இதே போல் திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமைகளில் விதவிதமான அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி 3-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஞானாம்பிகை மற்றும் அபிராமி அம்மன் வளையல் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கோவில் வளாகம் முழுவதும் வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
ஆடி மாத வெள்ளிக்கிழமைகள் அனைத்திலும் இக்கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி 3-வது வாரமான இன்று வளையல் அலங்காரத்தில் ஞானாம்பிகை, அபிராமியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
4-வது வாரம் புஷ்பபந்தல் அலங்காரமும் செய்யப்படுகிறது. 5-வது வாரம் பூப்பல்லக்கில் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இதே போல் ஆர்.எம்.காலனியில் அமைந்துள்ள வெக்காளியம்மன் இன்று தவக்கோலத்திலும், மேட்டுராஜக்காபட்டி காளியம்மன் வராஹி அலங்காரத்திலும், எம்.எவி.எம். நகர் தென் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் பத்மாவதி தாயார் சரஸ்வதி அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
ஆடி 3-வது வெள்ளியை முன்னிட்டு பண்ணாரியம்மன், மாதாபுவனேஸ்வரி, மேட்டுப்பட்டி காளியம்மன் உள்ளிட்ட நகரில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. அதிகாலை முதலே பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.