

அதன்படி இந்த ஆண்டு திருவிழா நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப் பட்டது.இதையொட்டி பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் திருச்சூரில் குவிந்திருந்தனர். விழாவில் பாரமேக்காவு மற்றும் திருவெம்பாடி பகவதி அம்மன் கோவில்களில் இருந்து திடம்புகள் தாங்கிய யானைகள், திருச்சூரில் உள்ள தேக்கின்காடு மைதானத்துக்கு அழைத்து வரப்பட்டன. அதன்பின்னர் தெற்கோட்டு இறக்கம் நிகழ்ச்சி தொடங்கியது.
வடக்குநாதர் கோவிலுக்கு அருகில் எதிர் எதிரே 15 யானைகள் என மொத்தம் 30 யானைகள் அணிவகுத்து நின்றன. ஒரு பகுதியில் யானைகளுக்கு மத்தியில் திருவெம்பாடி கோவில் சார்பில் சந்திரசேகரன் என்ற யானையும், மற்றொரு பகுதியில் யானைகளுக்கு நடுவே பாரமேக்காவு சார்பில் தெச்சிக்கோடு ராமச்சந்திரன் என்ற யானையும் அம்மன் திடம்பை தாங்கி நின்றன. அதன்பின்னர் மாலை 5.30 மணி அளவில் குடை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது.
தெற்கோட்டு இறக்கம் நிகழ்ச்சியில் வடக்குநாதர் கோவிலின் தெற்கு கோபுர வாசல் வழியாக திருவெம்பாடி யானை சந்திரசேகரன் வந்த காட்சி.
அதில் ஒவ்வொரு யானையின் மீதும் அமர்ந்திருந்தவர் வண்ண குடைகளை மாற்றி, மாற்றி தூக்கி காட்டினார். இதையடுத்து ஒவ்வொரு யானைகள் மீதும் நின்ற 2 பேர் வெஞ்சாமரம் மற்றும் ஆலவட்டம் வீசினர். இதனை அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர். மேலும் தங்கள் செல்போனிலும், கேமராக்களிலும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
பஞ்ச வாத்தியங்கள், இளஞ்சித்திர மேளம் முழங்க 2½ மணி நேரம் குடை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் இரவு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு வாண வேடிக்கை நிகழ்ச்சி நடக்கிறது.