அய்யங்குளத்தில் தீர்த்தவாரி: சிறப்பு அலங்காரத்தில் அருணாசலேஸ்வரர்

மஹோதய புண்ணிய காலத்தை முன்னிட்டு அய்யங்குளத்தில் நடந்த தீர்த்தவாரியில் சிறப்பு அலங்காரத்தில் அருணாசலேஸ்வரர் எழுந்தருளி அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் அருணாசலேஸ்வரரை வழிபட்டனர்.
சிறப்பு அலங்காரத்தில் அருணாசலேஸ்வரரும், பராசக்தி அம்மனும் அய்யங்குளத்திற்கு வந்தபோது எடுத்தபடம்.
சிறப்பு அலங்காரத்தில் அருணாசலேஸ்வரரும், பராசக்தி அம்மனும் அய்யங்குளத்திற்கு வந்தபோது எடுத்தபடம்.
Published on

இந்த ஆண்டு தை அமாவாசையானது சோமவாரமான திங்கட்கிழமையில் வந்தது புனிதமாக கருதப்படுகிறது. இது மஹோதய புண்ணியகாலம் எனவும் அழைக்கப்படுகிறது. இது போன்ற நிகழ்வு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே அமையும். அப்போது தீர்த்தவாரி நடைபெறும்.

இதனை முன்னிட்டு நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரருக்கும், உண்ணாமலை அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடு நடைபெற்றது.

பின்னர் சாமியும் அம்மனும் திருவண்ணாமலையில் உள்ள அய்யங்குளத்திற்கு எதிரே உள்ள மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து அய்யங்குளத்தில் சிவாச்சாரியர்கள் மூலம் சாமி சூலத்திற்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. அப்போது சூலத்திற்கு பால், மஞ்சள், சந்தனம் உள்பட பல்வேறு திரவியங்கள் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனை கண்டு தரிசனம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு திரண்டிருந்தனர். தீபாராதனை காண்பித்ததும் அவர்கள் பரவசத்துடன் வழிபட்டனர்.

அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றபோது எடுத்தபடம்.

கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8-ந் தேதி இதேபோல் அய்யங்குளத்தில் தை அமாவாசையை முன்னிட்டு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. அப்போது பக்தர்களின் நெருக்கடியால் 4 பேர் குளத்திற்குள் தவறி விழுந்து நீரில் மூழ்கி மூச்சு திணறி உயிரிழந்து உள்ளனர். எனவே அதுபோன்ற சம்பவங்களை தவிர்க்க பக்தர்கள் நெரிசலின்றி சாமி தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்காக அய்யங்குளத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு மட்டும் பக்தர்கள் செல்லும் வகையில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com