ஸ்ரீரங்கம் கோவிலில் நம்பெருமாள் நாளை ஊஞ்சல் உற்சவம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவம் நாளை(சனிக்கிழமை) தொடங்கி நவம்பர் 4-ந் தேதி வரை நடைபெறுகிறது.
ஸ்ரீரங்கம் கோவிலில் நம்பெருமாள் நாளை ஊஞ்சல் உற்சவம்
Published on

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவம் 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு ஊஞ்சல் உற்சவம் நாளை(சனிக்கிழமை) தொடங்கி நவம்பர் 4-ந் தேதி வரை நடைபெறுகிறது.

இதையொட்டி ஊஞ்சல் உற்சவத்தின் முதல் நாளான நாளை நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு ஊஞ்சல் மண்டபத்திற்கு எதிரில் உள்ள நாலுகால் மண்டபத்தில் திருவந்திக்காப்பு கண்டருளுகிறார். பின்னர் ஊஞ்சல் மண்டபத்திற்கு 5.30 மணிக்கு வந்தடைகிறார்.

அதன் பின் இரவு 7.15 மணிக்கு நம்பெருமாள் ஊஞ்சலில் எழுந்தருளியதும் மங்கள ஆரத்தி கண்டருளுகிறார். இந்த நிகழ்ச்சி இரவு 8.15 மணிவரை நடைபெறும். அதுசமயம் நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் ஊஞ்சல் ஆடியவாறு பக்தர்களுக்கு காட்சியளிப்பார். பின்னர் நம்பெருமாள் ஊஞ்சல் மண்டபத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15மணிக்கு மூலஸ்தானம் சென்றடை கிறார்.

இதேபோல் 2-ம் திருநாள் முதல் 6-ம் திருநாள் மற்றும் 8-ம் திருநாள் வரை தினமும் இரவு 7.15மணி முதல் இரவு 8.15 மணிவரை நம்பெருமாள் ஊஞ்சலாடும் நிகழ்ச்சி நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 7-ம் நாள் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு கொட்டார வாசலில் நெல்லளவு கண்டருளிய பின்னர் மாலை 6.45 மணிக்கு தாயார் சன்னதியில் திருவந்திக்காப்பு கண்டருளுகிறார். அங்கிருந்து புறப்பட்டு இரவு 7.15 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் வந்தடைகிறார்.

அதன்பின் ஊஞ்சல் மண்டபத்தில் இரவு 8.15 மணிமுதல் இரவு 9.15 மணிவரை ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. பின்னர் அங்கிருந்து நம்பெருமாள் இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு இரவு 10.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். விழாவின் நிறைவு நாளான 9-ம் நாள் (4-ந்தேதி) நம்பெருமாள் சந்திரபுஷ்கரணியில் காலை 9.45 மணிக்கு தீர்த்தவாரி கண்டருளுவதுடன் விழா நிறைவடைகிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன், கோவில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com