ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் தெப்ப உற்சவம் கண்டருளினார்

ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் தெப்ப உற்சவம் கண்டருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மாசி தெப்ப உற்சவம் நடந்த போது எடுத்த படம்.(உள்படம்) தெப்பத்தில் உபயநாச்சியார்களுடன் நம்பெருமாள்.
மாசி தெப்ப உற்சவம் நடந்த போது எடுத்த படம்.(உள்படம்) தெப்பத்தில் உபயநாச்சியார்களுடன் நம்பெருமாள்.
Published on

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத்திருவிழா கடந்த 18-ந் தேதி தொடங்கியது. விழாவையொட்டி தினமும் பல்வேறு வாகனங்களில் நம்பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நேற்று முன்தினம் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளினார்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி நேற்று மாலை 3 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து திருச்சிவிகையில் புறப்பட்டு மேலவாசலில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபத்திற்கு மாலை 5 மணிக்கு வந்து சேர்ந்தார்.

இரவு 7.15 மணிக்கு ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் இரவு 7.30 மணிக்கு எழுந்தருளினார். பின்னர் குளத்தின் மைய மண்டபத்தை 3 முறை வலம் வந்து இரவு 9 மணி வரை நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் தெப்ப உற்சவம் கண்டருளினார். பின்னர் இரவு 9.15 மணிக்கு மையமண்டபத்தில் எழுந்தருளினார்.

அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அங்கிருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானம் சென்றடைந்தார். இன்று(திங்கட்கிழமை) பந்தக்காட்சி நடைபெறுகிறது. இத்துடன் தெப்பத்திருவிழா நிறைவடைகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com