நெல்லையப்பர் கோவில் ஆனிப்பெருந்திருவிழா கொடியேற்றம் - திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

முக்கிய திருவிழாக்களில் ஆனி மாதத்தில் நடைபெறும் பெருந்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது.
Nellaiappar Templ kodiyetram
Published on

தென் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆண்டின் 12 மாதங்களிலும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அதில் முக்கிய திருவிழாக்களில் ஆனி மாதத்தில் நடைபெறும் பெருந்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது.

தேரோட்டம்

இந்த விழாவில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டத்தின்போது ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட சுவாமி நெல்லையப்பர் தேர் உள்ளிட்ட 5 தேர்கள் நெல்லையப்பர் கோவில் நான்கு ரதவீதிகளில் வலம் வரும். இதனை லட்சக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து நிலையம் சேர்ப்பார்கள்.

இத்தகைய பிரசித்தி பெற்ற திருவிழா இந்த ஆண்டு இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதற்காக கோவில் நடை இன்று அதிகாலை திறக்கப்பட்டு சுவாமி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

சிறப்பு பூஜை

தொடர்ந்து தங்க பூங்கோவில் சப்பரத்தில் சுவாமி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவில் திருவிழா மண்டபத்தில் எழுந்தருளினர். பின்னர் பெரிய தங்க கொடி மரத்தின் முன்பு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு கொடிபட்டத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

பின்னர் வேத மந்திரங்கள் முழங்க பஞ்ச வாத்தியம் இசைக்க, கோவில் பெரிய தங்க கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.

தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பால், மஞ்சள், தயிர், இளநீர் உள்ளிட்ட சிறப்பு அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பக்தர்கள் தரிசனம்

தொடர்ந்து சுவாடச உபச்சார மகாதீப ஆராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருவிழாவின் சிகர நிகழ்ச்சிகளில் ஒன்றான சுவாமி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி 23-ந் தேதியும் தங்க சப்ரத்தில் கங்காள நாதர் எழுந்தருளி வீதியுலா வருகிற 27-ந்தேதியும், தேரோட்டம் 28-ந்தேதியும் நடைபெறுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com