பெசன்ட்நகர் வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடைபயணம்

பக்தர்களுக்கு ஆலய வளாகம் மற்றும் பெசன்ட்நகர் கடற்கரை பகுதியில் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
பெசன்ட்நகர் வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடைபயணம்
Published on

சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலய 54-வது ஆண்டு திருவிழா இன்று (சனிக்கிழமை) தொடங்கி செப்டம்பர் 8-ந் தேதி வரை தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற உள்ளது.

பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயம்

அதன்படி பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தின் திருவிழா இன்று மாலை 5.45 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சென்னை மயிலை உயர்மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி 75 அடி உயர கொடிக்கம்பத்தில் 12 அடி நீளம் கொண்ட அன்னையின் உருவம் பொறித்த கொடியை ஏற்றி, கூட்டு திருப்பலியை நடத்துகிறார். தொடர்ந்து தினமும் காலை, மாலை திருப்பலிகள் நடக்கின்றன.

7-ந்தேதி தேர்ப்பவனி

அடுத்த மாதம் 7-ம்தேதி மாலை 5 மணிக்கு கூட்டுத் திருப்பலியும், தொடர்ந்து அன்னையின் தேர்பவனியும் நடைபெற உள்ளது. இதில், பல ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கலந்து கொள்வார்கள்.

திருப்பலி

8-ந்தேதி அன்னையின் பிறந்தநாளையொட்டி அதிகாலை 2 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்ந்து திருப்பலிகள் நடைபெற உள்ளன. காலை 7.45 மணிக்கு ஆங்கில திருப்பலியும், 9.30 மணிக்கு நடைபெறும் தமிழ் திருப்பலியும், அன்னைக்கு மணிமுடி சூட்டும் விழாவும் நடைபெறும்.

அன்றைய தினம் மாலை 5.30 மணிக்கு நடைபெறும் திருப்பலியை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான திருவிழா கொடி இறக்க நிகழ்வுடன் நிறைவடைகிறது.

பக்தர்கள் நடைபயணம்

இந்த ஆண்டு அமைதி என்ற மையக்கருத்தை வைத்து திருவிழா நடத்தப்படுகிறது. திருவிழாவிற்கு சென்னை மட்டுமல்லாமல் அண்டை மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும், புதுச்சேரியில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடைபயணமாக வேண்டுதல்களுடன் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.

அடிப்படை வசதிகள்

பக்தர்களுக்கு ஆலய வளாகம் மற்றும் பெசன்ட்நகர் கடற்கரை பகுதியில் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. விழாவை முன்னிட்டு மாநகர் போக்குவரத்து கழகம் சிறப்பு பஸ்களை இயக்க உள்ளது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்பட உள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com