கிருஷ்ணர் நிகழ்த்திய அற்புத லீலைகள்

கோகுலத்தில் கிருஷ்ணன் செய்த குறும்புகள் எண்ணிலடங்காதவை.
Krishna
Published on

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திருவிளையாடல்களையே கிருஷ்ண லீலை என்று அழைக்கிறோம். மனித வாழ்க்கையின் ஒவ்வொரு உணர்வையும், தர்மத்தையும் உணர்த்துவதற்காக அவர் நிகழ்த்திய அற்புதங்களே இந்த லீலைகள்

பிறப்பு லீலை

மதுரா சிறையில் பிறந்த குழந்தை கிருஷ்ணன், தன் தந்தை வசுதேவர் மூலம் இரவோடு இரவாக கோகுலத்திற்கு கொண்டு செல்லப்பட்டான். யமுனை நதி இரண்டாக பிளந்து வழிவிட்டதும், ஆதிசேஷன் குடையாக நின்றதும் முதல் லீலை.

பால பருவ லீலைகள்

கோகுலத்தில் கிருஷ்ணன் செய்த குறும்புகள் எண்ணிலடங்காதவை.

பூதனை வதம்

குழந்தையைக் கொல்ல விஷம் தடவிய பாலுடன் வந்த அரக்கி பூதனையின் உயிரை பால் குடிப்பது போல் குடித்து வதம் செய்தான்.

வெண்ணெய் திருடும் லீலை

கோபியர்கள் வீட்டில் வெண்ணெய் திருடி, நண்பர்களுக்கு கொடுத்து உண்ணும் கிருஷ்ணன், அன்பிற்கு அடிமையானவன் என்பதை காட்டுகிறான். அவனை ‘நவநீத சோரன்’ என்று அன்புடன் அழைப்பர்.

காளிங்க நர்த்தனம்

விஷம் கக்கி யமுனையை நஞ்சாக்கிய காளிங்கன் என்ற பாம்பின் மீது நடனமாடி அடக்கி, யமுனையை தூய்மைப்படுத்தினான். இது தீமையை அடக்கும் தைரியத்தை குறிக்கிறது

கோவர்த்தன லீலை

இந்திரனின் கர்வத்தை அடக்க, கோகுல மக்களை பெருமழையிலிருந்து காக்க கோவர்த்தன மலையையே குடையாக ஒரு சுண்டு விரலில் ஏழு நாட்கள் தூக்கிப் பிடித்தான். இதன் மூலம் இயற்கையை மதிக்க வேண்டும் என்பதை உணர்த்தினான்.

ராச லீலை

பிருந்தாவனத்தில் கோபியர்களுடன் ஆடிய ராசலீலை மிகவும் புகழ்பெற்றது. ஒவ்வொரு கோபிகைக்கும் ஒரு கிருஷ்ணனாக தோன்றி நடனமாடினான். இது ஆத்மாவிற்கும் பரமாத்மாவிற்கும் உள்ள தெய்வீக காதலை விளக்குகிறது. இது சாதாரண காதல் அல்ல, பக்தியின் உச்சம்.

கீதோபதேச லீலை

கிருஷ்ண லீலைகளின் உச்சம் குருக்ஷேத்திர போர்க்களத்தில் அர்ஜுனனுக்கு அவன் வழங்கிய பகவத் கீதை உபதேசம். குழப்பத்தில் இருந்த அர்ஜுனனுக்கு வாழ்வின் உண்மையை, கடமையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தான். கிருஷ்ண லீலைகள் ஒவ்வொன்றும் ஒரு தத்துவத்தை சொல்கிறது. குழந்தையாக இருக்கும் போது குறும்பு, நண்பனாக இருக்கும் போது அன்பு, எதிரிகளிடம் வீரம், பக்தர்களிடம் கருணை என அனைத்து பரிமாணங்களையும் காட்டுகிறது. அதனால் தான் கிருஷ்ணன் “பூரண அவதாரம்” என்று போற்றப்படுகிறான்.

கண்ணபிரான்

கண்ணபிரான் எல்லோருக்கும் உரியவன். அடியவர்கள் அவனை குழந்தையாக, தோழனாக, காதலனாக, வழிகாட்டியாக மற்றும் குருவாக பாவித்து சேவிக்கின்றனர். அவன் மீது பக்தி, காதல், கோபித்துக் கொண்டு கூட பாடிய அடியவர்கள் அனேகம்.

ஒரு நாட்டிய கலைஞராக, நாட்டிய குருவாக மற்றும் நடன இயக்குனராக மேற்கண்ட அத்துணை உணர்வுகளை ஒரு சேர அனுபவித்தவள் நான். எந்த நடன கலைஞருக்கும் கண்ணனைப் பற்றிய பாடலுக்கு ஆடுவதென்றால் ஒரு கல்யாண விருந்தினை உண்பது போன்றதாகும்.

கிருஷ்ண ஜெயந்தி

கிருஷ்ண ஜெயந்தி என்பது வெறும் பண்டிகை மட்டுமல்ல. அது நம் மனதில் உள்ள காமம், குரோதம், ஆணவம் போன்ற கம்சன்களை அழித்து, அன்பு என்னும் கிருஷ்ணனை மலரச் செய்யும் ஒரு ஆன்மீக வாய்ப்பாகும். கிருஷ்ண ஜெயந்தி அன்று கண்ணனை சேவிப்போம், அனுபவிப்போம்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com