தைப்பூசம்

முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும்.
தைப்பூசம்
Published on

தைப்பூசம் என்பது உலகெங்கும் பரவி உள்ள சைவ சமயத்தை சார்ந்த தமிழர்களால் கொண்டாடப்பட்டு வரும் ஒரு விழாவாகும். தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும்.

முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்பர். தை பூசம் ஒவ்வொரு வருடத்திலும் தை மாதம் (தமிழ் பஞ்சாங்கப்படி பத்தாவது மாதம். இது பூஸா மாதம் என்றும் அறியப்படும்) பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகனுக்கு (சுப்பிரமணியன் அல்லது கார்த்திகேயன்) எடுக்கப்படும் விழாவாகும்.

நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரமாகும். இவ்விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது.தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக ஐதீகம்.

முருகன் தமிழ்க்கடவுள் ஆவார்.முருகன் என்றால் அழகு என்று பொருள். முருகன் தேவ சேனாதிபதி (தேவர்களின் சேனாதிபதி) ஆகையால் இவர் ஒரு போர்க்கடவுள் ஆவார். தை பூசத்தன்று முருகன் தருகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு விழாவாக பழனியில் அனுஷ்டிக்கப்படுகிறது.

சிவபெருமான் உமாதேவியுடன் இருந்து சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என்பர்.

சிதம்பரத்திற்கு வந்து அரும்பெரும் திருப்பணிகள் செய்து, நடராஜரை இரணியவர்மன் என்னும் மன்னன் நேருக்கு நேராகத் தரிசித்தது இந்நாளிலேயே. இக்காரணங்களுக்காகவே சிவன் கோயில்களில் தைப்பூசத்தன்று சிறப்பு அபிஷேகங்களுடன் பூஜைகள் நடத்தப்படுகின்றன.

தேவர்களில் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும் என்பர்.

வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஒரு தை மாத வெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரத்தன்று தான் ஒளியானார். இதனைக் குறிக்கும் விதமாக அவர் ஒளியான வடலூருக்கு அருகில் உள்ள மேட்டுக்குப்பத்தில், தைப்பூசத்தன்று லட்சக்கணக்கானோர் கூடி வள்ளலார் விழாவைக் கொண்டாடுகிறார்கள்.

தைப்பூச விரத முறை

தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, திருநீறு, உருத்திராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபடுவர். தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாராயணம் செய்வர். உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம். மாலையில் கோயிலுக்குச் சென்று சிவ பூஜையில் பங்கேற்று சிவனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்வர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com