நவராத்திரி விரதமும் - சக்தி வழிபாடும்

கும்பம் (கலசம்)வைத்து அதில் ஆதி பராசக்தியை ஆவாகணம் செய்து வழிபடுவது வழக்கம்.வீடுகளிலும் பாடசாலைகளிலும் 9 நாட்கள் மட்டுமே இவ்விழா கொண்டாடப்பெறுகின்றது. சில இடங்களில் 10 நாளும் பூஜைகள் செய்வார்கள்.
நவராத்திரி விரதமும் - சக்தி வழிபாடும்
Published on

தனம் தரும் கல்விதரும் ஒரு நாளும் தளர்வறியா

மனம் தரும் தெய்வ வடிவம் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா

இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே

கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக் கண்களே

அம்பிகையின் அருளை பெறுவதற்கு பல விரதங்கள் அனுஷ்டிக்கப்பெற்றாலும் அவற்றுள் நவராத்திரி விரதமே மிகவும் சிறப்பானது என ஆகம நூல்கள் கூறுகின்றன.

முக்குணங்களுக்கும் மூலமான சர்வலோக நாயகி தமோ குண சஞ்சாரியாநன ஸ்ரீதுர்கா பரமேஸ்வரியாகவும், ராஜோ குண சொரூபியான ஸ்ரீ மகாலட்சுமியாகவும், சாத்வீகக் குண சொரூபியான ஸ்ரீ சரஸ்வதியாகவும், மூன்று அம்சமாக எமக்கு தோற்றமளிப்பதுடன் அந்த மூன்று அம்சங்களும் மேலும் பல அம்சங்களாக தோற்றமளிக்கின்றன.

துர்க்கையின் அம்சங்களாக (நவதுர்க்கை): வன துர்க்கை, சூலினி துர்க்கை , ஜாதவே தோதுர்க்கை, ஜ்வாலா துர்க்கை, சாந்தி துர்க்கை சபரி துர்க்கை, தீப் துர்க்கை, சூரி துர்க்கை லவண துர்க்கை ஆகியனவும்;

சரஸ்வதி அம்சங்களாகளாக (அஷ்ட சரஸ்வதி): வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கடசரஸ்வதி, நீலசரஸ்வதி, கினி சரஸ்வதி ஆகியனவும்;

இலக்குமியின் அமசங்களாக (அஷ்ட இலட்சுமி): ஆதி லட்சுமி, மாக இலட்சுமி, தன இலட்சுமி, தானிய இலட்சுமி , சந்தான இலட்சுமி, வீர இலட்சுமி, விஜய இலட்சுமி , கஜ இலட்சுமி ஆகிய சக்தி அம்சங்களாக எமக்கு தோற்றமளிக்கின்றன.

நவராத்திரி நோன்பு (விரதம்) புரட்டாதி மாதத்தில் நவக்கிரகங்களில் நாயகமாக உள்ள சூரியன், கன்னி இராசியில் சஞ்சரிக்கும் காலம் தட்சணாயண காலமாகும். இக்காலம் தேவர்களுக்கு இராக்காலமாகும். கன்னி ராசிக்கு அதிபதியானவன் புதன். வித்யாகாரகன் எனப்படுபவன். கல்வி, புத்தி, தொழில் ஸ்தானம் சரியாக அமைய புதனின் பார்வை முக்கியமானது என்பார். இந்தக் காலத்தில் நவராத்திரி கொண்டாடுவது சாலச்சிறந்தது என்று கருதி வந்துள்ளனர்.

உத்தராயணத்தில் வசந்த நவராத்திரியும் தட்சணாயன காலத்தில் சாரதா நவராத்திரியும் தேவியைப் பூசிக்கச் சிறந்த காலமாகும். இவை இரண்டிலும் புரட்டாதி மாதத்தில் நோற்கப்படும் (அனுஷ்டிக்கப்படும்) சாரதா நவராத்திரியையே நாம் எல்லோரும் கைக்கொள்ளுகின்றோம்.

நவராத்திரி பூஜை புரட்டாதி மாதத்தில் அமாவாசை கழிந்த பூர்வபட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி முடியச் செய்ய வேண்டும் என்று காரணாகமம் கூறுகின்றது. ஆகவே புரட்டாதி மாதத்தில் வளர்பிறைப் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாளும் கைக்கொள்ளப்படும் (அனுஷ்டிக்கப்படும் ) நோன்பு (விரதம்) சாரதா நவராத்திரி நோன்பாகும்.

ஆண்டு தோறும் புரட்டாசி மாதத்தில் 9 நாட்கள் அன்னை பராசக்தியை வீடுகளிலும், பாடசாலைகளிலும், ஆலயங்களிலும் பூஜை செய்து வழிபடும் சாரதா நவராத்திரி விழா இவ்வாண்டு ஒக்ரோபர் மாதம் திகதி சனிக்கிழமை (இலங்கை) தெற்காசிய நாடுகளிலும்; வெள்ளிக்கிழமை (கனடா) வட-அமெரிக்க நாடுகளிலும் ஆரம்பமாகின்றது.

முக்குணங்களுக்கும் மூலமான சர்வ லோக நாயகியை ஒன்பது நாள்களும் பூஜிக்கும்போது, முதல் மூன்று நாள்கள் தமோ குண சஞ்சாரியான ஸ்ரீதுர்கா பரமேஸ்வரியை வீரத்தையும், தைரியத்தையும் (ஒருநாளும் தளர்வு அறியா மனம்) வேண்டியும், அடுத்த மூன்று நாள்கள் ராஜோ குண சொரூபியான ஸ்ரீ மகாலட்சுமியை சகல செல்வங்களையும் (தனம்) வேண்டியும், கடைசி மூன்று நாள்கள் சாத்வீகக் குண சொரூபியான ஸ்ரீ சரஸ்வதியை கல்வி, அறிவு, சகல கலை ஞானங்கள் (ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்) என்பவற்றை வேண்டியும் வணங்குகின்றோம்.

இப் புண்ணியகாலமானது ஒன்பது தினங்களைக் கொண்டது. அதனாலேயே நவராத்திரி என்னும் நாமம் பெற்று விளங்குகின்றது, அந்த ஒன்பது நாட்களிலும் லோகமாதாவாகிய பராசக்தியை (அம்பிகையை) ஒன்பது வடிவங்களில் பூஜிக்கப்பெறுகின்றாள்.

அலைமகள், மலைமகள், கலைமகள் என முப்பெரும் தேவியரையும் துதித்து வழிபட்டு. இவ்வுலக வாழ்கை சிறப்பாக அமைய முக்கியமான கல்வி, செல்வம், வெற்றி (வீரம்) எம்பவற்றை இறைவியிடம் வேண்டி இந்துக்கள் இப் புனித நவராத்திரி விழாவை விரதம் அனுஷ்டித்து கொண்டாடுகின்றனர். ஒரு மனிதனிற்கு உடல்வலிமை, பராக்கிரம், மனோதிடம், புத்திபலம், தீர்க்காயுள், ஞானம், தேவைகளுக்கு பணம் போன்ற அனைத்து அம்சமும் நிறைந்திருந்தால் தான் அவன் சிறந்த வெற்றியாளனாக திகழ முடியும்.

அதாவது வீரம், செல்வம், கல்வி ஆகியவை அனைத்தும் நிறைந்திருக்க வேண்டுமாயின். அவற்றை அருளும் நவராத்திரி விரதம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என ஆகம நூல்கள் கூறுகின்றன. வாழ்க்கையின் எல்லா தேவைகளையும் அடைய பணம், பொருள் வேண்டும். இதற்காக மகாலட்சுமி தேவியை வணங்குகிறோம். பெற்ற பணத்தை பாதுகாக்க மன வலிமை வேண்டும் அதற்காக துர்க்கா தேவியை வழிபடுகிறோம். பெற்று பாதுகாக்கப்பட்ட பணத்தை நல்வழியில் பயனள்ள காரியங்களிற்கு பயன்படுத்த அறிவு அதாவது கல்வியறிவு வேண்டும். அதற்கு சரசுவதித் தாயை வணங்குகிறோம்.

இந்நவராத்திரி விழாவின்போது ஆலயங்களிலும், பாடசாலைகளிலும், பணிபுரியும் அலுவகங்களிலும், தொழிற்சாலைகளிலும் இல்லங்களிலும் கும்பம் (கலசம்)வைத்து அதில் ஆதி பராசக்தியை ஆவாகணம் செய்து வழிபடுவது வழக்கம். அத்துடன் கும்பத்தை மையப்படுத்தி கொலுவைத்தும் வழிபடுவார்கள். கொலு வைக்கும் வழக்கம் இந்தியாவில் பிரபலமானது. இவ் வழக்கம் தற்பொழுது இலங்கையிலும் பின்பற்றப்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய, முக்குணங்களுக்கும் மூலமான சர்வ லோக நாயகியாகிய அம்பிகையை ஒன்பது நாள்களும் பூஜிக்கும்போது, முதல் மூன்று நாள்கள் தமோ குண சஞ்சாரியான ஸ்ரீதுர்கா பரமேஸ்வரியாக வெற்றியையும் (வீரத்தையும், தைரியத்தையும் ஒருநாளும் தளர்வு அறியா மனம்) வேண்டியும், அடுத்த மூன்று நாள்கள் ராஜோ குண சொரூபியான ஸ்ரீ மகாலட்சுமியாக சகல செல்வங்களையும் (தனம்) வேண்டியும், கடைசி மூன்று நாள்கள் சாத்வீகக் குண சொரூபியான ஸ்ரீ சரஸ்வதிதேவியாக கல்வி, அறிவு, சகல கலை ஞானங்கள் (ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்) என்பவற்றை வேண்டியும் வணங்குகின்றோம்.

வீடுகளிலும் பாடசாலைகளிலும் 9 நாட்கள் மட்டுமே இவ்விழா கொண்டாடப்பெறுகின்றது. சில இடங்களில் 10 நாளும் பூஜைகள் செய்வார்கள். ஒன்பது நாட்களும் வண்ணக் கோலங்கள் போட வேண்டும். இந்த ஒன்பது நாளும் அம்பாள் ஒன்பது வகையான கோலத்துடன் காட்சியளிக்கிறாள் என்பது ஐதிகம்.

முதல் தினத்தில் தேவி மூன்று வயதுள்ள பாலையாகவும், இரண்டாவது தினத்தில் ஒன்பது வயதுள்ள குமாரிகை என்ற நவாக்ஷரீ ஸ்வரூபிணியாகவும், மூன்றாவது தினத்தில் பஞ்சதசாக்ஷரீ ஸ்வரூபிணியாகவும், நான்காவது தினத்தில் பதினாறு வயதுள்ள ஸ்திரீயாக ஷோடசாக்ஷரீ ஸ்வரூபிணியாகவும், ஐந்தாவது தினத்தில் சதாக்ஷீ என்ற பெயருடன் மாத்ருகா வர்ணஸ்வரூபிணியாகவும், ஆறாவது தினத்தில் சாகம்பரீ என்ற பெயருடன் ஸ்ரீவித்யாபீஜாக்ஷர ரூபிணியாகவும், ஏழாவது தினத்தில் துர்க்கமாஸ§ரனைக் கொன்ற மஹாதுர்க்கையாகவும், எட்டாவது தினத்தில் மஹிஷாசுரனைக் கொன்ற மஹாலக்ஷ்மி ஸ்வரூபிணியாகவும், ஒன்பதாவது தினத்தில் சும்பன் நிசும்பன் என்ற இரு அசுரர்களைக் கொன்று ஜகத்தை காத்த மகாசரஸ்வதியாகவும் அம்பாள் விளங்கி வருகிறாள் என்பது ஐதீகம்.

கொலுவைத்து ஒன்பது நாள் பூஜை செய்து வீட்டுக்கு வரும் அனைவருக்கும் தாம்பூலம், தட்சணை, நைவேதியப் பொருள் கொடுக்க வேண்டும். ஒன்பது நாளும் பூஜை செய்ய இயலாதவர்கள் கடைசி மூன்று நாட்களான சப்தமி, அஷ்டமி, நவமி தினங்களில் பூஜை செய்யலாம். இதுவும் செய்ய முடியாதவர்கள் அஷ்டமி நவமியில் பூஜை செய்து விஜய தசமியில் முடிக்கலாம்.

ஒன்பதாவது நாள் ஆயுத பூசை என அழைக்கப்பெறும் சிறப்புப் பூசை நிகழ்த்தப்பெறும். கல்விக்கான சரஸ்வதி பூஜையன்று புத்தகங்கள், இசை கருவிகள், தொழில் செய்யும் கருவிகள் எல்லாம் பூஜையில் வைக்க வேண்டும். மறுநாள் விஜய தசமியன்று பூஜை செய்து படிக்கவேண்டும். அவரவர் சங்கீதம் தொழில் குருவைக் கண்டு தொழுது குருதட்சணை கொடுத்து வணங்க வேண்டும்.

புதிய தொழில் தொடங்க உகந்த நாள் விஜயதசமி நன்னாளாகும். இரவு பால் நிவேதனம் செய்து பொம்மைகளைப் படுக்க வைக்க வேண்டும். மறுநாள் பூஜையிலிருந்து கொலு பொம்மைகளை எடுத்து அடுத்த வருடத்துக்காக அம்பாளை வரவேற்க தயாராக வேண்டும். அன்றைய தினம் பாடசாலைகளில் பாலகர்களுக்கு வித்யாரம்பம் செய்து வைக்கப்பெறும்.

10வது தினமான திகதி விஜயதசமி ஆலயங்களில் வெற்றித்தினமாக கொண்டாடப்பெறுகின்றது. விஜயதசமி தினம் என்பது அம்பிகை; தவ வலிமையினால் பிரமதேவனிடம் பெற்ற வரத்தினால் அகங்காரம் கொண்டு தேவர்களையும், முனிவர்களையும் சித்திரவதை செய்து கொடுமைப்படுத்தி வந்த மகிஷாசுரனை "சண்டிகா தேவியாக" (துர்க்கா தேவி, காளிதேவி எனக் கூறுவாரும் உளர்) அவதாரம் எடுத்து சங்காரம் செய்த வெற்றித் திருநாளாக கொண்டாடப்பெறுகின்றது. துன்பத்தை - அசுரர்களை துர்க்கையானவள் வீழ்த்தி வெற்றிபெறும் நாளே விஜயதசமி (விஜயம்-வெற்றி+தசம்- 10) என்று அழைக்கப்படுகிறது.

வேறு விதமாக கூறுவதாயின் அம்பிகை உயிர்களிடத்தே காணப்படும் அசுரத்தன்மைகளை அழிக்க சண்டிகாதேவியாக, துர்க்காதேவியாக அல்லது காளி தேவியாகத் தோன்றி அவற்றை சங்காரம் செய்கின்றாள் எனலாம். இவ் வெற்றித் திருநாள் சைவ பெருமக்ககளால் அம்பிகை ஆலயங்களில் (தற்போது எல்லா ஆல்யங்களிலும்) "மானம்பூ விழா" அல்லது "வன்னிவாழை வெட்டு" விழாவாக கொண்டாடப் பெற்றுவருகின்றது. வன்னிமரக் கிளைகள் குத்தப் பெற்ற கன்னிவாழையை மகிஷாசுரன் ஆக ஆவாகணம் செய்து அதனை வெட்டி விழுத்துவதன் மூலம் மகிஷாசுரனைச் சங்கரித்தல் நிகழ்வு நடைபெற்று அதன் வெற்றியை வெற்றித் திருநாளாக கொண்டாடுதலே மானம்பு அல்லது கன்னிவாழை வெட்டுவிழாவாகும். பணிப்புலம் முத்துமாரி அம்பிகை, காலையடி ஞான வேலாயுதர் ஆலயம் சென்று அங்கு வன்னிவாழை வெட்டு விழா நடைபெறுகின்றது.

இலங்கையிலும், தமிழகத்திலும் சரஸ்வதி பூஜை எனவும், இந்தியாவில் வட மாநிலங்களில் துர்கா பூஜை எனவும், கர்நாடகத்தில் தசரா பண்டிகையாகவும் இந்த விழா சிறப்பாகக் கொண்டாடப்பெறுகின்றன.

இந்தியாவில் கொல்கத்தா போன்ற வட மாநிலங்களில் முக்கிய நகரங்களில் இந்தப் பண்டிகை துர்கா பூஜையாகக் கொண்டாடப்படுகிறது. 9 நாட்கள் சாந்தரூபியாக தவம் மேற்கொண்டு வீற்றிருக்கும் தேவியானவள், 10ஆம் நாளின் (தசரா) விசுவரூபியாக அசுர பலத்துடன் ஆக்ரோஷமாக உருவெடுத்து, மகிஷாசுரனை வதம் செய்து மக்களுக்கு மகிழ்ச்சி நல்கும் ஆனந்த ரூபியாக காட்சியளிப்பதையே இந்த 10 நாட்கள் விழா குறிக்கிறது.

வீடுகளில் பெண்கள் கொலுவைத்து தங்களின் விரதத்தைத் தொடங்குகின்றனர். உறவினர்களையும், அண்டை வீட்டில் உள்ள பெண்களையும் வரவழைத்து, தேவியர் பெருமைகளை உணர்த்தும் பாடல்களை பாடி சிறப்பு பூஜைகள் செய்து, பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு தாம்பூலம் வழங்கி இவ் விரதத்தை கொண்டாடுவது வழக்கமாகும்.

தங்கள் வீடுகளில் கல்வி, செல்வம், வீரம் தழைக்க வேண்டியும், கணவன் உள்ளிட்ட குடும்பத்தில் உள்ள அனைவரின் நலம் போற்றியும் கொலு வைக்கும் பெண்கள், மற்றவர்களுக்கு தாம்பூலம், பிரசாதங்களை வழங்குகிறார்கள். நவராத்திரி விரதமிருப்போர் வீடுகளுக்குச் சென்று தாம்பூலம் வாங்குவோரின் இல்லங்களிலும் தேவி குடிகொண்டிருப்பாள் என்பது ஐதீகம் என்பதால், ஒருவருகொருவர் உறவினர், நண்பர்களின் வீடுகளுக்கு பரஸ்பரம் சென்று பூஜைகளில் பங்கேற்று தாம்பூலம் பெற்று வருவதே இவ் விரதத்தின் சிறப்பம்சமாகும்.

நவராத்திரியின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதேயாகும். கொலு என்பது பல படிகளை கொண்ட மேடையில் பலவித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைப்பதேயாகும்.

ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணினால் செய்யப்பட்ட பொம்மைகளை சக்தியின் அம்சங்களாக எண்ணி நவராத்திரியில் பூசிப்பவர்களிற்கு சகல நலங்களும் கிடைக்கும் என்பது சைவமக்களின் நம்பிக்கை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com