திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை திருவிழா

ஆடிக்கிருத்திகை என்பது சூரனை அழிக்க முருகப்பெருமான் சரவணப் பொய்கையில் 6 குழந்தைகளாக அவதரித்தார்.
Murugan Valli Deivanai
Published on

திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை திருவிழா இன்று நடக்கிறது.

திருத்தணி முருகன் கோவில்

முருகப்பெருமான் தேவர்களின் துயரம் நீங்கும் பொருட்டு சூரபத்மனுடன் செய்த பெரும் போரும் வள்ளியம்மையை மணந்து கொள்ள வேடர்களுடன் விளையாட்டாக நிகழ்த்திய சிறுகோபமும் தணிந்து அமர்ந்த தலம் ஆதலால் இதற்கு தணிகை என்று பெயரமைந்தது. இது முருகனின் அறுபடை வீடுகளில் 5-ம் படை வீடாக திகழ்கிறது.

முருகன் கையில் வஜ்ரவேல்

வருடத்தில் 365 நாட்களை குறிக்கும் வகையில் 365 படிகள் கொண்டதாக இந்த கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள உற்சவர் சன்னதி ஒரு லட்சம் ருத்ராட்சங்களால் ஆன ருத்ராட்ச மண்டபமாக உள்ளது. இந்திரன் தனது ஐராவத யானையை தெய்வானைக்கு கல்யாண பரிசாக தந்த தலம் இது. வழக்கமான வேலுக்கு பதிலாக இங்கு வஜ்ரவேல் மற்றும் மயில் வாகனத்துக்கு பதிலாக யானை வாகனம் மூலவருக்கு சிறப்பு தருகிறது.

சரவணப்பொய்கை

முருகப்பெருமான் சரவணப்பொய்கை தீர்த்தத்தில் கார்த்திகை பெண்களுக்கு குழந்தையாக அவதரித்த திருக்குளம், திருத்தணிகை சரவணப்பொய்கை தீர்த்தத்தில் நீராடுவோர் தங்களது உடல் உபாதைகள், பாவங்கள் களையப்படுவதாக ஐதீகம். சரவணப்பொய்கையில் நீராடிய பின்பே படிக்கட்டுகள் வழியாக மலைக்கோவிலை சென்றடைகின்றனர். ஆடிகிருத்திகை திருவிழாவின்போது மலைக்கோவிலில் உற்சவர் அலங்காரத்துடன் பவனி வந்து தெப்பக்குளத்தில் தெப்பத்தில் சுற்றி வருவது கண்கொள்ளா காட்சியாகும்.

ஆடிக்கிருத்திகை விசேஷம்

ஆடிக்கிருத்திகை என்பது சூரனை அழிக்க முருகப்பெருமான் சரவணப் பொய்கையில் 6 குழந்தைகளாக அவதரித்தார். அந்த குழந்தைகளை 6 கார்த்திகை பெண்கள் பாலூட்டி, சீராட்டி, பாராட்டி வளர்த்தனர். 'சரவணபவ' என்ற 6 எழுத்து மந்திரம், ஆறு முகம், ஆறு கரங்கள் உள்ளிட்ட பல சிறப்புகளையும், சூரனை அழித்து தேவர்களை காத்த ஆறுமுக பெருமானை வளர்த்த கார்த்திகை பெண்களை போற்றும் விதமாகக் கிருத்திகை விரத நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

மலர்க்காவடி

முருகப்பெருமானை இந்திரன், ஆடிக்கிருத்திகையன்று பூஜை செய்து வழிபட்டதாக ஐதீகம். எனவே, இத்தலத்தில் ஆடி கிருத்திகை திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்திரன் கல்ஹார புஷ்பம் என்னும் மலரை முருகனுக்கு சூட்டி வழிபட்ட தலமென்பதால் இங்கு அதிக அளவில் மலர்க்காவடி செலுத்துகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com