கார்த்திகை தீப திருநாள்- வழிபாட்டு முறையும், பலன்களும்

சிவபெருமான், திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று ஜோதிப்பிழம்பாக காட்சியருளினார். முழுமுதற்கடவுள் சிவபெருமானே என்ற நோக்கில் கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது.
கார்த்திகை தீப திருநாள்- வழிபாட்டு முறையும், பலன்களும்
Published on: 
Summary

கார்த்திகை மாத தீபத் திருநாளில் மட்டுமல்லாமல் கார்த்திகை மாதம் முழுவதும் நம் முன்னோர்கள் தீபமேற்றி வழிபட்டனர்.

கார்த்திகை மாதத்தில் வருகின்ற தீபத்திருநாள் மற்ற கார்த்திகை நாட்களினை விடவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்ற ஒரு நாளாகும். கார்த்திகை தீபத் திருநாளில் மாலை வேளையில் வீடுகளின் வெளிப்புறங்களிலும், வீட்டு முற்றத்திலும் விளக்கேற்றிக் கொண்டாடுவார்கள்.

படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனும், காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவும் நானே பெரியவன் என்று வாதாடிப் பல வருடங்கள் போரிட்டனர். இவர்களின் கர்வத்தை அடக்க எண்ணிய சிவபெருமான் இவர்கள் முன் ஜோதிப்பிழம்பாகத் தோன்றினார். அடியையும், முடியையும் தேடும்படி அசரீரி கூறியது.ஜோதியின் முடியைக் காண அன்னப்பறவை வடிவம் கொண்டு சதுர் முகப் பிரம்மன் விண்ணுலகம் சுற்றினார். அடியைக்காண திருமால், வராக அவதாரம் எடுத்து பாதாளலோகம் சென்று அடிமலரடியைத் தேடினார்.

சிவபெருமான்

அடிமுடி காணமுடியாத ஜோதிப்பிழம்பாக சிவபெருமான் தோன்றினார். அதனால் பிரம்மனும், விஷ்ணுவும் சிவபெருமானே முழுமுதற்கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர். அவர்கள் இருவரும் தாம் கண்ட ஜோதியை எல்லோரும் காணும்படி காட்சியருள வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

சிவபெருமான், திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று ஜோதிப்பிழம்பாக காட்சியருளினார். முழுமுதற்கடவுள் சிவபெருமானே என்ற நோக்கில் கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தீப விழாவின் முதன்மையான நிகழ்வு சொக்கப்பனை ஏற்றுதல். பனை மரத்தை பூலோக கற்பக விருட்சம் என்றும், பொற்பனை என்றும் சிறப்பிப்பார்கள். அதை அக்னியின் வடிவம் என்பார்கள்.

கார்த்திகை தீபத்திருநாளில் பனைமரத்தை வெட்டி எடுத்து வந்து ஆலயத்தின் முன்னுள்ள முற்றத்தில் வெட்டவெளியில் நடுவார்கள். அதை சுற்றி 10 அல்லது 15 அடி உயரத்திற்கு பனை ஓலைகளைக் கொண்டு கூம்பு போன்று அமைப்பார்கள்.

கார்த்திகை மாதம்

மாலையில் ஆலயங்களின் உச்சியில் தீபம் ஏற்றியதும், பஞ்ச மூர்த்திகளுக்கு தீபாராதனை செய்து, கோவிலுக்கு முன்புறம் அமைக்கப்பட்டிருக்கும் இந்த கூம்புகளுக்கு முன்பாக எழுந்தருளச் செய்வார்கள். பின்னர், சுவாமிக்கு தீபாராதனை செய்து, அந்த சுடரால் இந்த சொக்கப்பனைகளை கொளுத்துவர். சுடர் வேகமாகப் பரவி கொழுந்துவிட்டு எரியும். அந்த ஜோதியை சிவனாகவே எண்ணி வழிபடுவார்கள். இது அக்னி மய லிங்கமாகும்.

கார்த்திகை மாத தீபத் திருநாளில் மட்டுமல்லாமல் கார்த்திகை மாதம் முழுவதும் நம் முன்னோர்கள் தீபமேற்றி வழிபட்டனர்.

கு.பண்பரசு, சத்துவாச்சாரி, வேலூர்.
கு.பண்பரசு, சத்துவாச்சாரி, வேலூர்.

நல்லெண்ணெய்

ஏன் கார்த்திகை மாதம் தீபம் ஏற்றி வழிபட்டார்கள்? என்றால் கார்த்திகை மாதத்தில் மழைக்காலமும், பனியும் சற்று இணைந்தே குளிருடன் காணப்படும். இதனால் சளி, காய்ச்சல் அதிகமாகவே இருக்கும். அதுமட்டுமின்றி இக்காலத்தில் சிறு சிறு பூச்சிகளும், கொசுகளும் உலாவும். இதை கட்டுப்படுத்தவே நல்லெண்ணெய், காட்டாமணக்கு, சிற்றாமணக்கு, பசு நெய், வேப்ப எண்ணெய் மற்றும் பலவகை மூலிகை எண்ணெய்களை பயன்படுத்தி வீடெங்கும் தீபம் ஏற்றப்பட்டது.

இதனால் கொசு மற்றும் பூச்சிகள் குறைந்து நோய்களும் கட்டுக்குள் இருக்கும். மேலும் பல்வேறு மூலிகைகளை இந்நாளில் தூபமாக எரிப்பதாலும் பல்வேறு நன்மைகள் விளைகின்றன. அறிவியல் ரீதியாகவும் கார்த்திகை தீபத் திருநாள் நமக்கு பல நன்மைகளை அள்ளி தருகிறது.

கார்த்திகை தீபம் என்றாலே தீபங்கள் நிறைய ஏற்றுவது தான். கடைசி நேரத்தில் விளக்குகள் வாங்காமல் முன்கூட்டியே விளக்குகளை வாங்கி வைத்து கொள்ள வேண்டும். நம்மிடம் உள்ள தீய எண்ணங்களை நீக்கி நல்ல எண்ணங்களை எண்ணுவதற்காகத்தான் இந்த தீப வழிபாடு.

அகல் விளக்குகள்

வீட்டில் பழைய அகல் விளக்குகள் இருந்தாலும், வருடா வருடம் எல்லா விளக்குகளையும் வாங்க முடியாவிட்டாலும், ஒரு சில புதிய விளக்குகளை வாங்கி விளக்கேற்ற வேண்டும். பழைய அகல் விளக்குகளை நீரில் போட்டு எண்ணெய் பிசுக்கு போகுமாறு கழுவி காய வைக்க வேண்டும்.

புதிய அகல் விளக்குகளை வாங்கி வந்தவுடன் ஒரு பாத்திரத்தில் நீர் நிரப்பி விளக்குகளை சிறிது நேரமாவது போட்டு வைக்க வேண்டும். இதனால் விளக்குகளில் ஊற்றப்படும் எண்ணெய் கசிந்து விடாமல் இருக்கும்.

காமாட்சி விளக்கு

சிறிது நேரம் கழித்து விளக்குகளை நன்றாக தேய்த்து கழுவவும். கழுவியதை மின் விசிறி இருக்கும் இடத்திலோ அல்லது வெயில் படும் இடத்திலோ காய வைத்து எடுக்க வேண்டும். காய்ந்த மண் அகல் விளக்குகளை எடுத்து சந்தனம், குங்குமம் வைக்க வேண்டும். இவ்வாறு வைப்பதால் விளக்கு மங்களகரமாக இருக்கும். திரி போடும் இடத்தில் பொட்டு வைக்காமல் இடைப்பட்ட இடங்களில் சந்தனம், குங்குமம் வைக்க வேண்டும். முடிந்தால் எல்லா தீபங்களுக்கும் நெய் ஊற்றலாம். அப்படி இல்லையென்றால் காமாட்சி விளக்கு, குத்து விளக்கு போன்ற விளக்குகளுக்கு நெய் ஊற்றி தீபம் ஏற்றுவது நல்லது. மற்ற விளக்குகளுக்கு நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றலாம்.

தீபம்

தீபம் ஏற்றியதிலிருந்து தீபத்தை குளிர்விப்பது வரை விளக்கில் எண்ணெய் இருந்து கொண்டே இருக்க வேண்டும். கையால் வீசியோ, வாயால் ஊதியோ விளக்கை அணைக்கக்கூடாது. பூவை பயன்படுத்தி விளக்கை குளிர்விக்க வேண்டும். தீபமானது அகல் விளக்கு, காமாட்சி விளக்கு, குத்து விளக்கு, கிளியன் சட்டி என பல வடிவங்களில் ஏற்றப்படுகிறது. கிளியன் சட்டி எனப்படும் களி மண்ணாலான விளக்கில் பசு நெய் கொண்டு, பஞ்சு திரியிட்டு விளக்கேற்ற வேண்டும். அம்பிகை வாசம் செய்வதாக நம்பப்படும் பசு நெய்யை தீபத்தில் இடும்பொழுது, அது சிவமாகிய ஜோதியுடன் சேர்ந்து சிவசக்தி சொரூபமாகிறது.

வாழை இலை

தீபம் வைக்கும்போது கண்டிப்பாக சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய வாழை இலையை கீழே வைத்து அதன் மீது விளக்கு வைக்க வேண்டும். வாழை இலைக்கு பதில் பசு சாணம் கூட வைக்கலாம். வாசலின் இரு முனைகளில் வைக்கப்படும் இரு விளக்குகள் புதிதாக இருப்பது கட்டாயம், மீதம் உள்ள இடங்களில் பழைய விளக்குகளை உபயோகப்படுத்தலாம். தீபத்திருநாள் அன்று சுத்தமான விளக்குகளில் புதிதாக எண்ணெய் ஊற்றியே விளக்கு ஏற்ற வேண்டும். ஏற்கனவே ஏற்றி வந்த விளக்கில் இருந்த எண்ணெயில் ஏற்றுதல் தவறு. கண்டிப்பாக விளக்கு எண்ணெய், நல்லெண்ணெய் அல்லது நெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

விளக்குகளில் மஞ்சள், குங்குமம் வைத்து தயார் செய்து கொள்ள வேண்டும். விளக்கை தரையில் வைக்கக் கூடாது. இதனால் எத்தனை தீபங்கள் ஏற்றுகிறோமோ அதற்கு ஏற்றது போல் வாழை இலை, ஆலம் இலை, அரச இலை ஆகியவற்றை தயார் செய்து கொள்ள வேண்டும்.

பஞ்சலோக விளக்கு

தீபச் சுடரானது மகாலட்சுமியாகவும், அதில் தோன்றும் ஒளி சரஸ்வதியாகவும், வெப்பம் பார்வதியாகவும் கருதப்படுகிறது. கார்த்திகை தீபத்திருநாளில் கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டங்கள் விலகும். மேற்கு நோக்கி தீபம் ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும். வடக்கு நோக்கி ஏற்றினால் திருமணத்தடை அகலும். தெற்கு திசை நோக்கி விளக்கு ஏற்றுவது மிக மிக தவறாகும்.

குத்துவிளக்கு ஏற்றும் போது ஒரு முகம் ஏற்றினால் நினைத்த காரியங்கள் நிறைவேறும். 2 முகம் ஏற்றினால் குடும்பத்தில் நன்மை உண்டாகும். 3 முகம் ஏற்றினால் குழந்தை பேறு உண்டாகும். 4 முகம் ஏற்றினால் செல்வம் பெருகும். 5 முகம் ஏற்றினால் சகல நன்மையும் உண்டாகும். மண்ணால் செய்யப்பட்ட விளக்கு ஏற்றினால் பீடை விலகும். வெள்ளி விளக்கு ஏற்ற திருமகள் அருள் கிடைக்கும். பஞ்சலோக விளக்கு ஏற்ற தேவதை வசியம் உண்டாகும். வெண்கல விளக்கு ஏற்ற ஆரோக்கியம் உண்டாகும். இரும்பு விளக்கு ஏற்ற சனி கிரக தோஷம் விலகும்.

-கு.பண்பரசு,

சத்துவாச்சாரி, வேலூர்.

X