வாழ்வில் மகிழ்ச்சி தரும் கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு

திருமணம் ஆனவர்கள் கிருஷ்ண ஜெயந்தி விரதம் இருந்து வழிபட்டால் விரைவில் அந்த கிருஷ்ணரே குழந்தையாக வந்து அவதரிப்பார்.
krishna
Published on

நாளை(வெள்ளிக்கிழமை) கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

நாராயணரின் எட்டாவது அவதாரமான கிருஷ்ணர், தீய சக்திகளை அழித்து, பூமியில் தர்மத்தை நிலை நாட்ட வந்தவர். கம்சன், கவுரவர்கள் என அநீதியின் வடிவமாக இருந்தவர்களை வீழ்த்தி, நீதியை நிலைநாட்டினார். அதோடு மனிதகுலம் தர்மத்தின் வழியில் நடக்க வேண்டும் என்பதற்காக எந்த காலத்திற்கும் பொருந்தும் வகையிலான கீதை மொழியை அருளினார். “எப்போது எல்லாம் தர்மத்தை அழிக்கப்பட்டு, அதர்மம் தலை தூக்குகிறதோ, அப்போது தர்மத்தை மீண்டும் நிலை நாட்யுகம் தோறும் அவதாரம் எடுப்பேன் என்று பகவான் கிருஷ்ண பகவான் கூறியுள்ளார்.

விஷ்ணு புராணம்

செல்வம், பலம், புகழ், அழகு, ஞானம், துறவு என்ற ஆறு வளமைகளும் பூரணமாக அடையப் பெற்றவரே பகவான் என்று அழைக்கப்படுகிறார் என்று விஷ்ணு புராணம் குறிப்பிடுகிறது. கிருஷ்ணர் மேற்கூறிய தகுதியைப் பெற்றுள்ளதால் பகவான் என்று அறியப்படுகிறார்.

கிருஷ்ணரின் அவதாரம்

கிருஷ்ணரின் அவதாரத்திற்கு பல விதமான காரணங்கள் இருந்தாலும், கிருஷ்ணரே நேரடியாக அவதரிப்பதன் முக்கிய காரணம் பக்தர்களை வசீகரித்து மகிழ்ச்சி அளிப்பதற்கே ஆகும். அத்துடன் நாம் வாழ்க்கையை எப்படி இறை சிந்தனையில் நடத்த வேண்டும் என்பதை பகவத் கீதையின் வடிவில் உபதேசிப்பதற்காகவும் அவதரித்தார். பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தனது திவ்யமான வடிவினாலும், ரத்தினம் போன்ற உபதேசங்களினாலும் எல்லோர் இதயத்திலும் இடம் பிடிக்கவே அவதரித்தார். எனவே தான் உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் கோடிக்கணக்கான மக்களால் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி, ஜாதி, மத, இன, பேதமின்றி மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று கிருஷ்ணரே நம் வீட்டிற்கு வந்து நமக்கு அருள்புரிவதாக ஐதீகம்.

விரதம்

திருமணம் ஆனவர்கள் கிருஷ்ண ஜெயந்தி விரதம் இருந்து வழிபட்டால் விரைவில் அந்த கிருஷ்ணரே குழந்தையாக வந்து அவதரிப்பார்.

சிறு பிள்ளைகளுக்கு கிருஷ்ண லீலைகளையும், அவர் செய்த குறும்புகளையும் கதையாக சொல்ல வேண்டும். கிருஷ்ண ஜெயந்தியை காலை நேரத்தில் வழிபடுவதைவிட மாலை நேரத்தில் வழிபடுவதே சிறந்ததாகும். ஏனென்றால் கிருஷ்ணர் நடுநிசியில் அதாவது நள்ளிரவில் பிறந்ததாக புராணங்கள் கூறுகின்றது.

கிருஷ்ண ஜெயந்தி

அதனால் தான் கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று முழுவதும் விரதம் இருந்து மாலை வேளையில் பூஜையை தொடங்கி இரவு முழுவதும் பூஜைசெய்து மறுநாள் காலையில் பூஜை நிறைவு செய்ய வேண்டும். கிருஷ்ணருக்கு நெய்வேத்தியமாக படைத்தவற்றை முதலில் சாப்பிட்டு பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

பூஜை

கிருஷ்ண ஜெயந்தி அன்று அதிகாலையிலேயே வீட்டினை சுத்தம் செய்து, அரிசி மாவினால் கோலமிட வேண்டும். மாவிலை, தோரணங்கள் கட்ட வேண்டும். பூஜை அறையை சுத்தம் செய்து பூக்களினால் அலங்காரம் செய்ய வேண்டும். பின்னர் அரிசிமாவினால் குழந்தையின் கால் தடங்களை வீட்டு வாசலில் இருந்து பூஜை அறை வரை பதிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் அந்த ஆலிலை கிருஷ்ணனை நம் வீட்டிற்குள் அழைத்து வருவதாக நம்பிக்கை.

வீட்டில் கிருஷ்ணர் சிலை

வீட்டில் கிருஷ்ணர் சிலை, அல்லது கிருஷ்ணர் படம் இருந்தால் அதனை சுத்தம் செய்து பூ வைத்து அலங்கரிக்க வேண்டும். பூஜைக்கு நெய்வேத்தியமாக கண்ணனுக்கு பிடித்த வெண்ணெய், சர்க்கரை, அவல், முருக்கு, சீடை இனிப்பு சீடை, அதிரசம் தேன்குழல் போன்ற பல காரங்களை செய்து படைக்க வேண்டும். என பலவகை பலகாரங்களை படையல் இட்டு பூஜை செய்ய வேண்டும்.

வழிபாடு

இதன்பின்னர் முடிந்தால் அருகிலுள்ள கிருஷ்ணர் கோயிலுக்கு சென்று வழிபடுங்கள். மேலும் வழிபாட்டில் படைக்கப்பட்ட பிரசாதங்களை குடும்பத்தினர், வீட்டின் அருகிலுள்ள குழந்தைகள், பெரியவர்களுக்கு கொடுத்து மகிழுங்கள். குழந்தைகள் இந்த உணவை உண்பதன் மூலம் கிருஷ்ணரே நம் இல்லம் தேடி வந்ததாக பொருளாகும் என்பது குறிப்பிடத்தக்கது. கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு செல்வ வளத்தை அள்ளித்தரும் வழிபாடாகும். வீடுகளில் மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும் நிலைக்கச் செய்யும் கிருஷ்ண பரமாத்மாவை அவரது ஜெயந்தி நாளில் வரவேற்று வழிபடுவோம்.

X

Maalai Malar
www.maalaimalar.com