கந்த சஷ்டி விரதம்

முருகன் அருள் வேண்டி பக்தர்கள் இருக்கும் விரதங்களுள் மிகச்சிறப்புடையது சஷ்டி விரதம்.
முருகன்
முருகன்
Published on: 
Summary

கந்த சஷ்டி விரதம் இருப்போருக்கு குடும்பத்தில் மன நிம்மதி உண்டாகும், எதிரிகள் தொல்லை நீங்கும்.

வாழ்க்கையில் நாம் சந்திக்கும் வெளிப்பகைகளை விட நமக்குள்ளேயே ஒளிந்திருக்கும் அகப்பகைகளே நம் வீழ்ச்சிக்குக் காரணம். அசுரனை அழித்தான் முருகன் என்றால், அது ஏதோ புராணத்தில் நடந்த சம்பவம் மட்டுமல்ல. நமக்குள்ளே இருக்கும் அகப்பகைகளை வீழ்த்தும் ஆன்மீக குறியீடு.

கந்த சஷ்டி விரதம் என்பது வெறும் வயிற்றைக் காயப்போடும் நோன்பு அல்ல. அது நம் மனதை சீரமைக்கும் ஆறு நாள் உளவியல் வேள்வி. ஒவ்வொரு நாளும் ஒரு தீய குணத்தை வென்று, ஆறாம் நாள் வெற்றி கண்டு, ஏழாம் நாள் அந்த ஆனந்தத்தைக் கொண்டாடுவதே கந்த சஷ்டியின் மெய்யான தத்துவம்.

ஆறு நாள்... ஆறு வெற்றிகள்!

முதல் நாள் - ஆசை அறுத்தல்

ஆசையே துன்பத்திற்கு காரணம். முதல் நாள் விரதத்தில் உணவைக் கட்டுப்படுத்துவது போல, தேவையற்ற ஆசைகளையும், எல்லை மீறிய விருப்பங்களையும் துறக்கப் பழகுகிறோம்.

இரண்டாம் நாள - கோபம் தணித்தல்

அமைதியைக் கெடுக்கும் மிகப்பெரிய அரக்கன் கோபம். இரண்டாம் நாளில் அமைதியையும் சாந்தத்தையும் மனதிற்குள் கொண்டு வந்து, கோபத்தை வெல்லும் ஆற்றலைப் பெறுகிறோம்.

மூன்றாம் நாள் - சுயநலம் அழித்தல்

‘நான்’, ‘எனது’ என்ற குறுகிய எண்ணமே மனிதனைத் தனிமைப்படுத்துகிறது. மூன்றாம் நாளில் பிறர் நலன் சிந்தித்து, தியாக உணர்வை வளர்த்துச் சுயநலத்தை அறுத்தெறிகிறோம்.

நான்காம் நாள் - ஆணவம் அடக்குதல்

‘நான்தான் பெரியவன்’, என்ற தாரகாசுரத்தனமான கர்வம் ஆன்மீகப் பாதையின் மிகப்பெரியத் தடை. நான்காம் நாளில், தந்தைக்கு உபதேசம் செய்த மைந்தன் முன் தலைவணங்கி ஆணவத்தை சுட்டெரிக்கிறோம்.

ஐந்தாம் நாள் - பொறாமை நீக்குதல்

அடுத்தவர் வாழ்வைக் கண்டு பொறாமைப்படும் குணம் நம் நிம்மதியைப் பறித்துவிடும். ஐந்தாம் நாளில் குருமார்களின் நல்லாசி பெற்று, பொறாமையை முற்றிலுமாக அகற்றி மனதை தூய்மையாக்குகிறோம்.

ஆறாம் நாள் - மனதின் வெற்றி

ஆசை, கோபம், சுயநலம், ஆணவம், பொறாமை ஆகியவற்றை ஒவ்வொன்றாக வென்ற பின், ஆறாம் நாளான சஷ்டி அன்று மனதின் அத்தனை தீமைகளும் அடியோடு அறுத்தெறியப்பட்டு, ஞானம் என்ற பேரொளி வெற்றி பெறுகிறது. இதுவே சூரசம்ஹாரம்.

ஏழாம் நாள் - திருக்கல்யாணக் கொண்டாட்டம்

ஐந்து நாட்களும் நம் அகப்பகைகளை அழித்து, ஆறாம் நாள் மனதை தூய்மையாக்கிவிட்டால், ஏழாம் நாள் நம் ஆன்மா இறைவனோடு இணையத் தகுதி பெறுகிறது.

அசுர குணங்கள் அழிந்து தூய்மையான மனமாக மாறிய ஆன்மாவை இறைவனாகிய கந்தன் ஆட்கொள்ளும் பேரானந்த நிகழ்வே தேவசேனாதிபதி திருக்கல்யாணம்! இது வெறும் சடங்கல்ல; நம் மனதிற்குள் நடக்கும் தெய்வீகக் கொண்டாட்டம்.

பூங்குன்றன் சங்கரலிங்கம்
பூங்குன்றன் சங்கரலிங்கம்

விரத முறை உங்கள் கைகளில்...

இந்த 6 நாட்களும் முழுமையாக விரதம் இருந்து, 7-ம் நாள் திருக்கல்யாண விருந்தை உண்டும் விரதத்தை முடிக்கலாம். அல்லது 7-ம் நாள், முருகப் பக்தர்களை அழைத்து பூஜை நடத்தி அவர்களுக்கு உணவு படைத்துப் பிறகு நமது விரதத்தை நிறைவு செய்யலாம்.

இயலாதவர்கள், சூரசம்ஹார தினத்தன்று மட்டும் முழுமையாக விரதம் இருக்கலாம். உங்களால் எந்த அளவிற்கு முடியுமோ, அந்த அளவிற்கு நம்பிக்கையோடும் முயற்சியோடும் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். விரதம் என்பது நம்மை வருத்துவது அல்ல. நம் உடலை தூய்மைப்படுத்துவது; நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவது.

போரில் இல்லை விரதத்தின் பெருமை,

புலனை வெல்வதே விரதத்தின் அருமை!

“என்னால் இந்த விரதத்தை இருக்க முடியுமா?” என்று தயங்குபவர்கள், உணவை குறைப்பதோடு சேர்த்து இந்த ஐந்து தீய குணங்களையும் ஒவ்வொரு நாளாக குறைக்கத் தொடங்கினாலே போதுமானது. உண்மையான விரதம் என்பது, “உடலை வருத்துவதில் இல்லை; மனதைத் திருத்துவதில் இருக்கிறது”. இந்தச் சஷ்டியில் நாமும் நம் அகப்பகைகளை வென்று, அந்தத் தெய்வீகக் கொண்டாட்டத்தில் பங்கேற்போம்.

கந்த சஷ்டி விரத பலன்கள்

முருகன் அருள் வேண்டி பக்தர்கள் இருக்கும் விரதங்களுள் மிகச்சிறப்புடையது சஷ்டி விரதம். இந்த விரதத்தை மனதில் கொண்டே “சஷ்டியிலிருந்தால் அகப்பையில் வரும்” என்ற பழமொழி எழுந்தது. சஷ்டி விரதம் இருந்தால் நல்ல குழந்தை பேறு கிடைக்கும் என்பது பொருள். சஷ்டி விரதம் இருந்தால் நம் உள்ளத்தில் இறைவன் குடி கொள்வான் என்ற பொருளும் உண்டு.

கந்தவேள் சூரபத்மனை வெற்றி கொண்ட நாளே கந்த சஷ்டி. நமது உள்ளத்தில் ஆட்சி செய்து வாழும் காமம் முதலிய சூரபதுமனை முருகவேளின் ஞான வேலினால் அழித்து, பேரின்பம் எய்தும் குறிப்பே சூரசம்ஹாரத்தின் பொருளாகும். அதற்குரிய ஆன்மீக வீரம் பெற உதவுவதே கந்த சஷ்டி விரதமாகும்.

கந்த புராணம்

கந்த சஷ்டி விரதம் இருக்கும் நாட்களில் செகமாயை… என்று தொடங்கும் திருப்புகழைப் பாராயணம் செய்வோருக்கு குழந்தைப் பேறு கிடைக்கும் என்று கூறியுள்ளார் வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள். கந்த சஷ்டி விரதம் இருப்போருக்கு குடும்பத்தில் மன நிம்மதி உண்டாகும், எதிரிகள் தொல்லை நீங்கும். நன்மக்கட் பேறும் கிடைக்கும் என்பது உண்மை.

சஷ்டி 6 நாட்களும் கந்த புராணம் படிப்பது என்பது ஒருவகை வழிபாடாகும். பாம்பன் ஸ்ரீமத் குமர குருபரதாச சுவாமிகள், கந்த புராணத்தின் சுருக்கமாக ‘முதல்வன் புராண முடிப்பு’ என்னும் பத்து பாடல்களை அருளியுள்ளார். இதனைப் பாராயணம் செய்தால் முழு கந்த புராணத்தையும் பாராயணம் செய்த பலன் கிடைக்கும்.

X