

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான சர்ச்சைகள் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கிய நிலையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தந்தி டி.வி.க்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியிருப்பதாவது:-
ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர், அவரைப் பார்க்க அனுமதிக்குமாறு அமைச்சர்கள் யாரும் அனுமதி கோரவில்லை. அமைச்சர்கள் யாரும் பார்க்கவும் இல்லை.
அவர் மருத்துவமனையில் இருந்த நாட்களில் நான் கிட்டத்தட்ட 60 நாட்கள் அங்கு சென்றிருப்பேன். அப்போது ஜெயலலிதாவின் பாதுகாவலர்கள் ஒருத்தர் கூட மருத்துவமனையில் இல்லை. அவருக்கு வழங்கப்பட்ட இசட் பிளஸ் பாதுகாப்பு அகற்றப்பட்டது ஏன்? என்று தெரியவில்லை.
அப்பல்லோ மருத்துவமனையில் அவருக்கு மிகச்சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது மரணத்தில் எந்த சந்தேகமும் எனக்கு கிடையாது. ஜெயலலிதாவை சசிகலா அருமையாக கவனித்துக்கொண்டார்.
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக்க ஆட்சேபனை இல்லை. ஆனால் அரசு அதற்குரிய இழப்பிடு தரவேண்டும்.
ஜெயலலிதா 3 நாட்கள் மட்டுமே சுயநினைவோடு இருந்தார். ஆளுநர் வரும்போது சுயநினைவுடன் இல்லை.
காவிரி வழக்கு தொடர்பாக ஜெயலலிதா தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டதாக வெளியான செய்தி பொய். அப்படியே ஆலோசனை நடந்ததா இல்லையா என்பது குறித்து சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் கேட்டுக்கொள்ளுங்கள்.
மரணம் தொடர்பாக நீதி விசாரணையை வரவேற்கிறேன். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது ஒருநாள் கூட தினகரன் பார்க்க வரவில்லை. அவர் எக்காரணம் கொண்டும் பொறுப்புக்கு வரக்கூடாது. தற்போது நடைபெறும் என் அத்தை ஜெயலலிதாவின் ஆட்சிதான். இந்த ஆட்சி தொடரும்.
கமல், ரஜினி அரசியலுக்கு வருவதைப் பார்த்து யாரும் பயப்பட வேண்டியதில்லை. இரட்டை இலை சின்னம் இருக்கும்வரை அ.தி.மு.க.வுக்கு வெற்றி நிச்சயம்.