இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் மாமியாருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை

புதுவையில் இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் மாமியாருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து புதுவை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் மாமியாருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை
Published on

புதுச்சேரி:

புதுவை மூலக்குளம் பகுதியை சேர்ந்தவர் பாபு. இவருடைய மனைவி சுமதி (வயது 42). இவர்களுடைய மகன் சபரிராஜன். இவர், கடந்த 2012-ம் ஆண்டு ஜோஸ்பின் (25) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். இதையடுத்து சபரிராஜன், ஜோஸ்பினுடன் மேட்டுப்பாளையம் பகுதியில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தார்.

திருமணம் முடிந்து ஓராண்டு கடந்த நிலையில் மாமியார் சுமதி, ஜோஸ்பினை கடுமையான வார்த்தைகளால் திட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஜோஸ்பின் வீட்டில் இருந்த மண் எண்ணெயை உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அப்போது ஆஸ்பத்திரியில் ஜோஸ்பினிடம் குற்றவியல் நீதிபதி மரண வாக்குமூலம் பெற்றார்.

அதில் மாமியார் தன்னை திட்டி, தற்கொலைக்கு தூண்டியதாக தெரிவித்தார். பின்னர் சிகிச்சை பலனின்றி ஜோஸ்பின் உயிரிழந்தார். இதுதொடர்பாக மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுமதியை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை புதுவை உதவி அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எழிலரசி முன்னிலையில் நடந்து வந்தது.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட சுமதிக்கு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.1000 அபராதம் விதித்து நீதிபதி எழிலரசி தீர்ப்பு அளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் முத்துவேல் ஆஜரானார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com