சேத்தியாத்தோப்பு அருகே இளம்பெண் கொலை: சி.பி.சி.ஐ.டி.க்கு வழக்கை மாற்ற கோரி திருமாவளவன் வலியுறுத்தல்

இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும் என்று விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுதியுள்ளார்.
சேத்தியாத்தோப்பு அருகே இளம்பெண் கொலை: சி.பி.சி.ஐ.டி.க்கு வழக்கை மாற்ற கோரி திருமாவளவன் வலியுறுத்தல்
Published on

கடலூர்:

விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் கடலூருக்கு இன்று வந்தார். அவர் சேத்தியாத்தோப்பு அருகே பரதூர் சாவடி கிராமத்தில் வைத்தீஸ்வரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக கலெக்டர் தண்டபாணியிடம் மனு கொடுத்தார்.

பின்னர் வெளியே வந்த திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சிறுமி வைத்தீஸ்வரி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக விடுதலை சிறுத்தை கட்சியினர், பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

இந்த கொலை தொடர்பாக ஆதிதிராவிடர் இல்லாத 3 பேர் குற்றச்செயலில் ஈடுபட்டதாக தகவல் வந்தது. இந்த ஒருசில மணி நேரத்தில் ஆதிதிராவிடரை சேர்ந்த மணிகண்டன் என்பவரை மட்டுமே போலீசார் கைது செய்தனர்.

இந்த செயல் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்டவர்களின் புகாரையும் போலீசார் பெறவில்லை.

கைது செய்யப்பட்ட மணிகண்டன், சம்பவத்தை செய்ததுபோல் படம் எடுத்து சமூக வளைதலங்களில் வெளியீடு செய்தது சட்டமீறலாகும். ஜனநாயகத்துக்கு எதிர்ப்பாகும். எனவே இந்த வழக்கு தொடர்பாக கலெக்டரை சந்தித்து இன்று புகார் மனு கொடுத்துள்ளோம். கலெக்டரும் புலன் விசாரணை நடைபெறும் என்று தெரிவித்தார்.

இந்த வழக்கை சி.பி. சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும். மேலும் ஆதிதிராவிடர் இல்லாத சந்தேக நபர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது:- காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தை கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் நடத்திய போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபயணம் நடந்து வருகிறது. நாளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், நான் (திருமாவளவன்) உள்பட தோழமை கட்சி தலைவர்கள் அந்த நடைபயணத்தில் பங்கேற்க உள்ளோம்.

வருகிற 12-ந் தேதி கடலூரில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அதற்கு மறுநாள் 13-ந் தேதி கடலூரில் இருந்து அனைத்துக்கட்சி தலைவர்களும் சென்னைக்கு புறப்பட்டு சென்று தமிழக கவர்னரை சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது சம்பந்தமாக பேச உள்ளோம்.

பிரதமர் மோடி சென்னைக்கு வரும் போது தி.மு.க., விடுதலை சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

காவிரி பிரச்சினை இருக்கும் நிலையில் கர்நாடகாவை சேர்ந்த சூரப்பாவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக நியமித்தது உள்நோக்கத்தின் செயல்பாடாகும். கவர்னர் இதைனை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடத்துவது திசை திருப்பும் நடவடிக்கையாகும். வன்கொடுமை தடுப்பு சட்டம் சம்பந்தமாக வருகிற 16-ந் தேதி தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தை, ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

தமிழக பாரதீய ஜனதா தலைவர்கள், தமிழகத்தில் நடந்து வரும் போராட்டங்களை கிண்டல் செய்வது கண்டிக்கத்தக்கது. அவர்களும் தமிழர்கள்தான் என்பதை மறக்க வேண்டாம். நடிகர்கள் நடத்திய போராட்டத்தை வரவேற்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மண்டல தலைவர் திருமாறன், மாநில செயலாளர் திருமார்பன், கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச் செல்வன், நகர செயலாளர் செந்தில் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com