வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் கர்நாடகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது: எடியூரப்பா

இந்தியாவிலேயே வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் கர்நாடகம் முதன்மை மாநிலமாக விளங்குவதாக முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
எடியூரப்பா
எடியூரப்பா
Published on

பெங்களூரு :

பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில் இந்திய ஜப்பான் வர்த்தக அமைப்பு சார்பில் நடந்த இந்திய ஜப்பான் வர்த்தகம் தொடர்பான காணொலி கருத்தரங்கை முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று தொடக்கி வைத்தார். இந்த கருத்தரங்கில் எடியூரப்பா பேசியதாவது:-

இந்தியாவும், ஜப்பானும் இயல்பான பங்குதாரர்கள். இருநாடுகளுக்கும் இடையே உள்ள உறவை பலப்படுத்த வேண்டும். ஜனநாயகம், தனிநபர் சுதந்திரம், சட்டம் போன்றவற்றில் இருநாடுகளும் ஒற்றுமையாக உள்ளது. பொருளாதார மாற்றத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ள இந்தியா, அனைத்து துறைகளிலும் ஜப்பான் நாட்டின் நிறுவனங்களின் முதலீடுகளை ஊக்குவித்து வருகிறது. இருநாடுகளின் சரக்கு மற்றும் சேவைகளின் வர்த்தகத்தை ஊக்குவிப்பதற்காகவே இந்தியா மற்றும் ஜப்பான் இடையே ஒருங்கிணைந்த பொருளாதார பங்களிப்பு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

ஜப்பான் நிறுவனங்களின் தொழில் முதலீடுகளுக்கு இந்தியா ஊக்கம் அளித்துவருகிறது. 2017-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் ஜப்பானில் இருந்து இந்தியாவுக்கு வெளிநாட்டு நேரடி முதலீடுகள் உயர்ந்துள்ளது. கர்நாடகத்திற்கு ஜப்பான் மிக முக்கியமான தொழில் பங்குதாரராக விளங்குகிறது. மாநிலத்தில் பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்காக கர்நாடகத்தில் ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்பட்டுள்ளது.

வெளிநாட்டு நேரடி முதலீடுகளை அதிகம் ஈர்ப்பதில் இந்தியாவிலேயே கர்நாடகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. கொரோனாவுக்கு பிறகு பொருளாதார நடவடிக்கைகளை விரிவுப்படுத்தும்போது, ஜப்பானில் இருந்து கர்நாடகத்திற்கு ஈர்க்கப்படும் தொழில் முதலீடுகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்படும். தரமான மனித வளம், உயர்தர கல்விநிறுவனங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு ஊக்கம் போன்ற காரணமாக கர்நாடகத்தில் முதலீடுகள் அதிகரித்துள்ளது.

துமகூருவுக்கு அருகில் உள்ள வசந்த்நரசாபுராவில் ஜப்பான் தொழிற்பேட்டையை கர்நாடக அரசு அமைத்துள்ளது. இந்த தொழிற்பேட்டை 519 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ளது. இங்கு சாலை, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை அரசு மேற்கொண்டுள்ளது. மின்னணுப்பொருள் உற்பத்தித்துறையில் ஏராளமான தொழில் முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன. இந்த துறையில் முதலீடு செய்ய விரும்புவோருக்கு நிலத்தின் மீதான மூலதன முதலீடு மானியமாக 25 சதவீதம் அளிக்கப்பட்டு வருகிறது.

தொழில் முதலீடுகளுக்கான அனுமதிகளை வழங்குவதற்காக புதிய தொழில் கொள்கைகையை கர்நாடக அரசு கொண்டு வந்துள்ளது. இதற்காக சட்டத்திலும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் தொழில் தொடங்குவதற்கான விதிமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. தொழில் தொடங்கு விரும்பும் தொழில் முதலீட்டாளர்களுக்காக ஏராளமான சலுகைகளையும் அரசு அறிவித்திருக்கிறது. கர்நாடகத்தை வளமாக கட்டமைக்கவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவதே அரசின் ஒரே நோக்கமாகும். .

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

காணொலி காட்சி மூலமாக நடந்த இந்த கருத்தரங்கில் ஜப்பான் நாட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரி சஞ்சய்குமார் வர்மா, ஜப்பான் நாட்டு தூதரக அதிகாரி சதோசி சுஜிகி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com