அமெரிக்கா, ஐரோப்பிய யூனியனுடன் அமைதி பேச்சுவார்த்தை: அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்

ரஷ்யா பெரும் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக உக்ரேனுக்கு உளவு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.
ஜெலன்ஸ்கி
ஜெலன்ஸ்கி
Published on: 

ரஷ்யாவுடனான போருக்கு ஒரு தீர்வு காண்பதற்கான வாய்ப்புகள் குறித்து, அமெரிக்க அதிபரின் தூதர்களான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் மற்றும் ஐரோப்பிய பிரதிநிதிகளுடன் உக்ரைன் இணையவழியில் புதிய பேச்சுவார்த்தைகளை நடத்தியதாக அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.

அபுதாபியில் அமெரிக்கா, உக்ரேன் மற்றும் ரஷ்ய அதிகாரிகள் ஒன்பது மாதங்களுக்கு பிறகு முதன்முறையாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்திய ஒரு வாரத்திற்குள் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

முயற்சிகள் வீணாகாது:

"தூதரக ரீதியிலான செயல்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன; இந்த முயற்சிகள் வீணாகாது என்று நம்புகிறோம். எங்கள் குழு மிகவும் ஆக்கபூர்வமான முறையில் பணியாற்றி வருகிறது," என்று ஜெலென்ஸ்கி கூறினார்.

பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், இத்தாலி மற்றும் போலந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் இதில் முழுமையாக பங்கேற்றனர் என்றும், ரஷ்ய பேச்சுவார்த்தையாளர்களுடனான எதிர்கால சந்திப்புகளிலும் அவர்கள் இதேபோல் பங்கேற்பார்கள் என்றும் ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.

இந்த விவாதம் "எளிதானதாக இருக்கவில்லை" என்று அவர் குறிப்பிட்டார், ஆனால் கூடுதல் விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை. இருப்பினும், உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் நாடுகளின் கூட்டணியுடன் பெர்லினில் மீண்டும் சந்திப்பதற்கு அனைவரும் ஒப்புக்கொண்டதாக அவர் கூறினார்.

பெரும் தாக்குதல் திட்டம்:

தனது இரவு நேர காணொளி உரையில் பேசிய ஜெலென்ஸ்கி, திங்கள்கிழமை மாலை, இரவு முழுவதும் மற்றும் செவ்வாய் கிழமை ஆகிய நாட்களில் உக்ரேனிய இலக்குகள் மீது ரஷ்யா பெரும் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக உக்ரேனுக்கு உளவு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.

வட கொரியா ரஷ்யாவிற்கு புதிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை வழங்கி வருவதாகவும், தனது ஆயுதங்களை மேம்படுத்தி வருவதாகவும் உளவுத்துறை தகவல்கள் காட்டுவதாகவும் அவர் கூறினார்.

X