

மெக்சிகோவின் தேசிய பாதுகாப்புப் படையான நேஷனல் கார்டில், வெறும் 7 கிலோ எடையும், 21 சென்டிமீட்டர் உயரமும் கொண்ட சிறிய வகை 'சிஹுவாஹுவா' (Chihuahua) நாய் ஒன்று அதிகாரப்பூர்வமாகப் பணியமர்த்தப்பட்டுள்ளது.
ராணுவ உடை மற்றும் நவீன உபகரணங்களுடன் வலம் வரும் இந்த நாய், உலகளவில் சமூக வலைத்தளங்களில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
'கமாண்டோ' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த 13 மாத குட்டி நாய்க்கு, ராணுவ வீரர்களைப் போலவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சிறிய ரகத் தற்காப்புக் கண்ணாடிகள், தந்திரோபாய உடுப்பு, ஹெல்மெட் மற்றும் தலையில் பொருத்தக்கூடிய சிறிய கேமரா ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
ராணுவப் படைகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஜெர்மன் ஷெப்பர்ட் அல்லது லேப்ரடார் போன்ற பிரம்மாண்டமான நாய்களுக்கு மத்தியில், இந்த சிறிய நாய் அனைவரின் பார்வையும் தன் பக்கம் ஈர்த்துள்ளது.
கமாண்டோ வெறும் காட்சிப் பொருளாகவோ அல்லது விளம்பரத்திற்காகவோ மட்டும் பயன்படுத்தப்படவில்லை. மெக்சிகோ சிட்டியில் நடைபெற்ற சமீபத்திய பயிற்சி முகாமில், மற்ற பெரிய நாய்களுக்கு இணையாகப் படிகளில் ஏறுவது, தடைகளைத் தாண்டி ஓடுவது போன்ற கடினமான பயிற்சிகளை இது சுறுசுறுப்புடன் செய்து காட்டியுள்ளது.
எதிர்காலத்தில் பேரிடர் காலங்களில் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களைத் தேடும் மற்றும் மீட்கும் பணிகளுக்காக இதற்குத் தீவிரப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து லெப்டினன்ட் டெபோரா ஹெர்னாண்டஸ் கூறுகையில், "பெரிய நாய் இனங்கள் மட்டும்தான் ராணுவத்தில் பணியாற்ற முடியும் என்ற பொதுவான எண்ணத்தை கமாண்டோ உடைத்துள்ளது.
மேலும், கடுமையான ராணுவக் கட்டுப்பாடுகள் கொண்ட எங்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஒரு அன்பான பிணைப்பை உருவாக்க இது உதவுகிறது. ராணுவச் சீருடைக்கு பின்னால் நாங்களும் சாதாரண மனிதர்கள் தான் என்பதை மக்களுக்கு நினைவூட்டுகிறது" என்றார்.
சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு, வடக்கு மெக்சிகோவின் சிஹுவாஹுவா மாகாணத்தில் உள்ள ஒரு முதிய தம்பதியினரால் இதைப் பராமரிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டபோது, நேஷனல் கார்டு படை இதனைத் தத்தெடுத்தது.
மெக்சிகோ தேசியப் படையில் உள்ள 350-க்கும் மேற்பட்ட நாய் படைகளில், கமாண்டோ மட்டுமே மிக விசித்திரமான மற்றும் சிறிய உறுப்பினராகும்.
சமீபத்தில் நடைபெற்ற மெக்சிகோ சுதந்திர தின அணிவகுப்பில் பங்கேற்ற கமாண்டோ, தற்போது இணையத்தில் அனிமேஷன் கார்ட்டூன் வடிவங்களாகவும், ஏராளமான மீம்ஸ்களாகவும் உலக அளவில் வைரலாகி வருகிறது.