தற்போது உலகிலேயே மிக அதிக வயதுடைய உயிருள்ள நபராகக் கருதப்படும் பிரிட்டனைச் சேர்ந்த மூதாட்டி எத்தல் கேத்தர்ஹாம், தனது 117-வது பிறந்தநாளைக் குடும்பத்தினருடன் உற்சாகமாகக் கொண்டாடியுள்ளார்.
இரண்டு உலகப் போர்கள், வரலாற்றுச் சிறப்புமிக்கப் பேரழிவுகள் என மனித வரலாற்றின் பல முக்கியக் கட்டங்களை நேரில் பார்த்த இவரது வாழ்க்கை வரலாறு தற்போதைய தலைமுறையினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பிரிட்டனின் ஹாம்ப்ஷயர் மாகாணத்தில் உள்ள ஷிப்டன் பெல்லிங்கர் என்ற ஊரில், கடந்த 1909-ஆம் ஆண்டு எத்தல் கேத்தர்ஹாம் பிறந்தார். தற்போது அவர் பிரிட்டனின் சர்ரே பகுதியில் உள்ள ஒரு முதியோர் காப்பகத்தில் வசித்து வருகிறார்.
பிரிட்டிஷ் ராணுவ லெப்டினென்ட் கர்னலான நார்மன் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட எத்தலுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
தனது 117-வது பிறந்தநாளை தனது மகள்கள், பேரக்குழந்தைகள் மற்றும் கொள்ளுப் பேரக் குழந்தைகளுடன் கேக் வெட்டி அவர் மகிழ்ச்சியாகக் கொண்டாடினார்.
எத்தல் கேத்தர்ஹாமின் வாழ்க்கையில் இந்தியாவிற்கும் ஒரு முக்கியப் பின்னணி உள்ளது. பிரிட்டன் மன்னர் 7-ஆம் எட்வர்ட்டின் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்தவர்களில் தற்போது உயிருடன் இருக்கும் ஒரே நபரான இவர், தனது பதின்ம வயதில் அதாவது 1927-ஆம் ஆண்டில் இந்தியாவுக்குப் பயணம் செய்துள்ளார்.
அங்கு ஒரு ராணுவக் குடும்பத்தில் தங்கி, குழந்தைகளைப் பராமரிக்கும் பணியை அவர் சில ஆண்டுகள் மேற்கொண்டுள்ளார். அதன் பிறகு தனது கணவருடன் ஹாங்காங் உள்ளிட்ட பல நாடுகளிலும் அவர் வாழ்ந்துள்ளார்.
எத்தலின் ஆயுட்காலம் மனித வரலாற்றின் பெரும் திருப்புமுனைகளை உள்ளடக்கியது. புகழ்பெற்ற 'டைட்டானிக்' கப்பல் விபத்துக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பும், ரஷ்யப் புரட்சி நடப்பதற்கு 8 ஆண்டுகளுக்கு முன்பும் இவர் பிறந்துவிட்டார்.
மனிதகுலத்தையே உலுக்கிய 1 மற்றும் 2-வது உலகப் போர்களை இவர் நேரில் கண்டுள்ளார்.
கடந்த 2020-ஆம் ஆண்டில், தனது 110-வது வயதில் உலகைப் அச்சுறுத்திய கொரோனா தொற்றால் எத்தல் பாதிக்கப்பட்டார். ஆனால், அந்த அதிமுதிய வயதிலும் கொரோனாவை வெற்றிகரமாக வென்று மீண்டு வந்து சாதனை படைத்தார்.
உலகிலேயே மிக மூத்த உயிருள்ள நபராக இருந்த பிரேசிலைச் சேர்ந்த கன்னியாஸ்திரி சிஸ்டர் இனா கனபரோ லூகாஸ், தனது 116-வது வயதில் காலமானார்.
அவரது மறைவுக்குப் பிறகு, கடந்த ஏப்ரல் 2025-ல் எத்தல் கேத்தர்ஹாம் "உலகின் மிக மூத்த உயிருள்ள நபர்" என்ற பெருமையைப் பெற்றார்.
தற்போது வெற்றிகரமாக 116 ஆண்டுகளைக் கடந்து 117-வது வயதில் தடம் பதித்து உலக சாதனைப் புத்தகங்களில் இடம்பிடித்துள்ளார்.