உலகிலேயே முதல் முறை: 3D-பிரிண்டிங் மூலம் புதிய அலகுகளைப் பெற்ற இருவாட்சிப் பறவை!

பறவை பலமாக உணவைக் கொத்தினாலும் உடையாத வகையில் உலோகத்தைப் பயன்படுத்தி இந்த 3D அலகுகள் தயாரிக்கப்பட்டன.
3D Printed Beak
Published on: 
Summary

நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆர்டிஸ் விலங்கியல் பூங்காவில், கடுமையான காயத்தால் தனது அலகுகளை இழந்த 'சதர்ன் கிரவுண்ட்' வகை இருவாட்சிப் பறவை ஒன்றுக்கு 3D-பிரிண்டிங் தொழில்நுட்பம் மூலம் புதிய அலகுகள் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டுள்ளன.

ஒரு பறவையின் மேல் மற்றும் கீழ் ஆகிய இரண்டு அலகுகளுமே 3D-பிரிண்டிங் முறையில் முழுமையாக மீட்டெடுக்கப்படுவது உலக வரலாற்றிலேயே இதுவே முதல் முறை என்று பூங்கா நிர்வாகம் பெருமையுடன் அறிவித்துள்ளது.

உயிருக்கே சவாலான காயம்

பூமியில் உணவைத் தேடி கொத்தும்போது ஏற்பட்ட விபத்தில், அந்தப் பறவையின் மேல் மற்றும் கீழ் அலகுகளின் பெரும் பகுதி உடைந்து, வெறும் இரண்டு சிறிய துண்டுகள் மட்டுமே எஞ்சியிருந்தன.

இருவாட்சிப் பறவைகளுக்கு அவற்றின் அலகு என்பது வெறும் தோற்றம் மட்டுமல்ல; உணவை வேட்டையாடவும், சிறகுகளைப் பராமரிக்கவும் அதுவே மிக முக்கியத் தேவையாகும். அலகு உடைந்ததால் அந்தப் பறவையால் தரையிலிருந்து கடினமான உணவுகளைத் தானாக எடுத்து உண்ண முடியாமல், அன்றாட வாழ்க்கையைத் தொடர மிகவும் சிரமப்பட்டு வந்தது.

நவீன தொழில்நுட்பத்தின் கூட்டணி

இந்தப் பறவையைக் காப்பாற்ற, ஆர்டிஸ் விலங்கியல் பூங்காவின் கால்நடை மருத்துவர்கள், உட்ரெக்ட் பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவப் பிரிவு, யுஎம்சி உட்ரெக்ட் மருத்துவமனை மற்றும் அம்னோவிஸ் ஆகிய மருத்துவத் தொழில்நுட்ப அமைப்புகளுடன் கைகோர்த்தனர்.

பறவையின் எஞ்சியிருந்த அலகுப் பகுதியையும், அதன் சிடி ஸ்கேன் தரவுகளையும் கொண்டு, அதற்குத் கச்சிதமாகப் பொருந்தக்கூடிய புதிய அலகுகள் கணினியில் வடிவமைக்கப்பட்டன.

பறவை பலமாக உணவைக் கொத்தினாலும் உடையாத வகையில், இலகுவான மற்றும் மிக வலிமையான டைட்டானியம் உலோகத்தைப் பயன்படுத்தி இந்த 3D அலகுகள் தயாரிக்கப்பட்டன.

அறுவை சிகிச்சையும் உடனடி வெற்றியும்

நிபுணத்துவம் வாய்ந்த கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர்கள், அந்தப் பறவையின் எஞ்சியிருந்த எலும்புப் பகுதியில் இந்த இரண்டு செயற்கை டைட்டானியம் அலகுகளையும் வெற்றிகரமாகப் பொருத்தினர்.

அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அதே நாளிலேயே, அந்தப் பறவை தனது புதிய அலகைப் பயன்படுத்தத் தொடங்கியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அடுத்த நாள் காலையிலேயே, அது தரையிலிருந்து ஒரு சிறிய எலியைத் தானாகவே கொத்தி எடுத்துச் சாப்பிட்டது. சில நாட்களிலேயே தனது இறகுகளையும் அதுவே நேர்த்தியாகச் சுத்தம் செய்யத் தொடங்கியுள்ளது.

கால்நடை மருத்துவத்தில் புதிய மைல்கல்

"அலகுப் பகுதியை இழக்கும் பறவைகள் தங்களின் தோற்றத்தை மட்டும் இழப்பதில்லை; தங்களின் வாழ்வாதாரத்தையே இழக்கின்றன" என்று சமூக ஊடகங்களில் பூங்கா நிர்வாகம் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளது.

இந்த அதிரடித் தொழில்நுட்ப வெற்றி, எதிர்காலத்தில் விபத்துகளில் சிக்கி அலகுகளை இழக்கும் பல்வேறு அரிய வகை பறவைகளைக் காப்பாற்ற ஒரு புதிய வாசலைத் திறந்துள்ளதாகப் பாராட்டி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com