

அங்குத்தர நிகாயாவில் உள்ள கலாம் சூத்தா விளக்கத்தின்படி, ஒரு கருத்து பழமையானது என்பதற்காகவோ, பலரால் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டது என்பதற்காகவோ அல்லது மதிக்கப்படும் பெரியவர்கள் சொன்னார்கள் என்பதற்காகவோ அதை அப்படியே ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று புத்தர் கூறியுள்ளார்.
இன்று (நவம்பர் 10) அனுசரிக்கப்படும் உலக அமைதிக்கான அறிவியல் மற்றும் மேம்பாட்டு தினத்தை முன்னிட்டு, எதையும் கண்மூடித்தனமாக ஏற்காமல் சுயமரியாதையுடன் ஆராய்ந்து அறியும் புத்தரின் போதனைகள் தற்கால அறிவியல் சிந்தனைக்கு எவ்வாறு பொருந்துகின்றன என்பதை உலக அறிவியல் தினத்தில் அறிந்து கொள்வோம்.
இணைய வழிச் செய்திகளும் சமூக வலைதளச் செய்திகளும் எவ்வித ஆதாரமும் இன்றி பரவும் காலத்தில், எதையும் சரிபார்த்து ஏற்றுக்கொள்ளும் பழக்கம் அவசியமாகிறது. அறிவியல் ஆய்வுகள் தொடங்குவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே புத்தர் இந்த சிந்தனையை மக்களுக்கு வழங்கியுள்ளார். இன்றைய காலகட்டத்தில் வாட்ஸ்அப் குழுக்களிலும் சமூக ஊடகங்களிலும் வரும் தகவல்களை அப்படியே நம்பாமல், அதன் உண்மைத் தன்மையை ஆராய்வது முக்கியமானது என இத்தினம் நினைவூட்டுகிறது.
அங்குத்தர நிகாயாவில் உள்ள கலாம் சூத்தா விளக்கத்தின்படி, ஒரு கருத்து பழமையானது என்பதற்காகவோ, பலரால் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டது என்பதற்காகவோ அல்லது மதிக்கப்படும் பெரியவர்கள் சொன்னார்கள் என்பதற்காகவோ அதை அப்படியே ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று புத்தர் கூறியுள்ளார். அதையும் தாண்டி அந்த போதனையை நாமே சுய பரிசோதனை செய்து, அது நன்மையைத் தருகிறதா அல்லது தீமையை விளைவிக்கிறதா என்பதை ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும் என்பதே இதன் சாரமாகும்.
புத்தரின் போதனைகளில் கேள்வி கேட்பதும் சந்தேகம் எழுப்புவதும் எதிர்ப்பாகப் பார்க்கப்படுவதில்லை; மாறாக அதுவே அறிவை தேடும் முறையின் ஒரு பகுதியாகவும் ஆரோக்கியமான சிந்தனையாகவும் கருதப்படுகிறது. இன்றைய அறிவியல் அணுகுமுறையும் எதார்த்த உண்மைகளை ஆதாரங்களுடன் சோதித்தறிவதையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. எனவே, எதைக் கேட்பதாக இருந்தாலும் அதற்கான ஆதாரம் எங்குள்ளது என்பதைத் தேடுவதும், திறந்த மனதுடன் விவாதிப்பதும் மனித சமூகத்தின் அமைதிக்கு வழிவகுக்கும்.