உலக வீடற்றோர் நாள்: வாழ்வாதாரமின்றித் தவிக்கும் கோடிக்கணக்கான மக்களின் துயரத்தைப் போக்க உலகளாவிய விழிப்புணர்வு

உலகளவில் சுமார் 150 மில்லியன் மக்கள் சொந்த வீடு இல்லாமல் தவித்து வருகின்றனர்.
World Homeless Day
Published on: 
Summary

வீடற்ற பிரச்சனை என்பது பல்வேறு சமூக மற்றும் பொருளாதார காரணிகளின் பின்னணியைக் கொண்டது. மலிவான விலையில் வீடுகள் கிடைக்காமை, வேலையின்மை, வறுமை மற்றும் குறைந்த கூலி ஆகியவை இதன் நான்கு முக்கியப் பிரதான காரணங்களாகக் கூறப்படுகின்றன.

வீடற்ற மக்களின் வாழ்வை மேம்படுத்தவும், அவர்களின் தேவைகள் மற்றும் உரிமைகள் குறித்து உள்ளூர் மட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் இன்று அக்டோபர் 10-ஆம் தேதி உலக வீடற்றோர் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகளவில் சுமார் 150 மில்லியன் மக்கள் சொந்த வீடு இல்லாமல் தவித்து வருகின்றனர்.

இது உலக மக்கள் தொகையில் சுமார் 2 சதவீதமாகும். முறையான தங்குமிடம் இல்லாததால் இத்தகைய மக்கள் கடுமையான நோய்கள், போதிய ஊட்டச்சத்து இன்மை, சுத்தமான குடிநீர் மற்றும் உலவ உலர் ஆடைகள் கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். பெரிய நகரங்களில் உள்ள நெருக்கடியான குடிசைப் பகுதிகளில் மிக மோசமான வாழ்க்கைச் சூழலில் இவர்கள் வாழ நேரிடுகிறது.

வீடற்ற பிரச்சனை என்பது பல்வேறு சமூக மற்றும் பொருளாதார காரணிகளின் பின்னணியைக் கொண்டது. மலிவான விலையில் வீடுகள் கிடைக்காமை, வேலையின்மை, வறுமை மற்றும் குறைந்த கூலி ஆகியவை இதன் நான்கு முக்கியப் பிரதான காரணங்களாகக் கூறப்படுகின்றன. மேலும், மனநலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டு உரிய மருத்துவச் சேவைகள் கிடைக்காதவர்களும் எளிதில் வீடற்றவர்களாக மாறுகின்றனர். பெண்களைப் பொறுத்தவரை, குடும்ப வன்முறை காரணமாக வீட்டைவிட்டு வெளியேறும் சூழல் ஏற்படுவது வீடற்ற நிலைக்கு முக்கிய காரணமாக அமைகிறது. அடிப்படைத் தேவைகள் எவற்றுக்கும் வழியின்றி வானமே கூரையாக வாழ்ந்து வரும் இவர்களின் அவல நிலைக்குத் தீர்வு காண்பது சவாலானதாக உள்ளது.

உலகம் முழுவதும் உள்ள 100-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் இத்தினத்தில் ஒன்றிணைந்து விழிப்புணர்வு நிகழ்வுகளை முன்னெடுக்கின்றனர். மாநாடுகள், கருத்தரங்குகள் நடத்துவதுடன், தொண்டு நிறுவனங்கள் மூலமாக நிதி திரட்டப்பட்டு வீடற்ற மக்களுக்கு உதவிகள் செய்யப்படுகின்றன. பொதுமக்கள் தங்களது உள்ளூர் பகுதியில் உள்ள காப்பகங்களுக்கு உதவிகளைச் செய்வது, தன்னார்வலர்களாகப் பங்களிப்பது மற்றும் இது குறித்த விழிப்புணர்வு நூல்கள் மற்றும் திரைப்படங்கள் மூலம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் மூலமாக மட்டுமே இவர்களின் துயரங்களைத் துடைத்தெறிய முடியும்.

X

Maalai Malar
www.maalaimalar.com