பிரான்ஸில் காட்டுத்தீ: 1,100 ஹெக்டேர் காடுகள் சாம்பல்; 500-க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றம்!

'லுக்லான்' என்ற சிறிய கிராமத்திற்கு மிக அருகில் தீப்பொறிகள் எழும்பின
France Wildfire
Published on

ஐரோப்பிய நாடான பிரான்ஸின் தென்மேற்குப் பகுதியில் திடீரெனப் பரவிய காட்டுத்தீயால் ஒட்டுமொத்தப் பகுதியும் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

இதுவரை 1100 ஹெக்டேருக்கும் அதிகமான காடுகள் தீயில் கருகியுள்ள நிலையில், பாதுகாப்பு கருதி 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு அவசரமாக வெளியேறினார்.

தீவிரம் அடைந்த வெப்ப அலை

இந்த ஆண்டு கோடைகாலத்தில் பிரான்ஸ் நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தொடர்ச்சியான வெப்ப அலைகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

காடுகள் வறண்டு, மிக எளிதாகத் தீப்பற்றக்கூடிய "தகரப் பெட்டி" போன்ற சூழலில் இருந்ததே இந்தத் தீ விபத்து மிக வேகமாகப் பரவியதற்குக் முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

வியாழக்கிழமை அன்று லேண்ட்ஸ் மாகாணத்தில் இந்த புதிய காட்டுத்தீ உருவாகியுள்ளது.

தீயணைப்பு வீரர்களின் போராட்டம்

காட்டுத்தீயைக் கட்டுக்குள் கொண்டு வர 500-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் அதிநவீன வாகனங்கள் களமிறக்கப்பட்டுள்ளன.

நள்ளிரவு நேரத்தில், 'லாண்டஸ் டி காஸ்கோக்னே' இயற்கை பூங்காவில் அமைந்துள்ள 'லுக்லான்' என்ற சிறிய கிராமத்திற்கு மிக அருகில் தீப்பொறிகள் எழும்பின.

எனினும், தீயணைப்பு வீரர்கள் இரவு முழுவதும் போராடி தீயை கிராமத்திற்குள் நுழைய விடாமல் தடுத்தனர். இதனால் வீடுகள் எதுவும் சேதமடையவில்லை என்றும் கூறினர்.

அடுத்த 15 மணி நேரம்

நேற்றைய நிலவரப்படி, லுக்லான் கிராமம் முழுவதும் அடர்ந்த கரும்புகை சூழ்ந்து காணப்படுகிறது. தீயின் வேகம் தற்பொழுது சற்றே குறைந்திருந்தாலும், மதிய நேரத்தில் வெப்பநிலை மீண்டும் 36°C வரை உயரக்கூடும் என்பதால், அணைக்கப்பட்ட தீ மீண்டும் பற்றிக்கொள்ளலாம் எனத் தீயணைப்புத் துறைத் தலைவர் அர்னாட் ஃபாப்ரே கவலை தெரிவித்துள்ளார்.

மாகாண அதிகாரி கில்ஸ் கிளாரூல் செய்தியாளர்களிடம் பேசுகையில், "அடுத்த 15 மணி நேரம் நமக்கு மிகவும் சவாலான மற்றும் தீர்க்கமான நேரமாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

வரலாற்றுப் பின்னணி

பிரான்ஸ் அதிகாரிகள் தற்பொழுது ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிட்டு வருகின்றனர்.

தென்மேற்கு பிரான்சில் கடந்த 1949-ஆம் ஆண்டிற்குப் பிறகு ஏற்பட்ட மிக மோசமான மற்றும் மிகப்பெரிய காட்டுத்தீ சம்பவங்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது என்றும் கூறி வருகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com