

விண்வெளிப் பயணம் செல்லும் வீரர்கள் எப்படி மலம் கழிக்கிறார்கள் என்ற கேள்வி பலருக்கு எழுவதுண்டு.
விண்வெளி வீரர்களுக்கு பெரிய தலைவலியான விஷயமும் இந்த மலம் கழித்தல் தான். விண்வெளியில் அவர்களின் ஜீரண மண்டலம் மிகவும் மெதுவாகவே செயல்படுவதால் சாதரணமாக மலம் கழிப்பது என்பது அவர்களுக்கு மிகவும் கடினமான ஒன்றாகிறது.
நேச்சுரல் கம்யூனிகேஷன்ஸ் என்ற அறிவியல் இதழில் வெளியான ஆய்வு முடிவு ஒன்று, விண்ணில் மனித செரிமான மண்டலத்தில் என்ன நடக்கிறது என்பது குறித்த உயிரியல் ரீதியான விஷயங்களை பற்றி விவரிக்கிறது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் 2 முதல் 9 மாதங்கள் வரை கழித்த விண்வெளி வீரர்களின் ரத்த மாதிரிகளை விஞ்ஞானிகள் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு, உடல், குடலில் உள்ள உணவு, குடல் நுண்ணுயிரிகள் ஆகியவற்றின் மூலக்கூறுகளில் ஏற்பட்ட மாற்றங்களை கவனித்தனர்.
உணவில் இருந்து உடல் ஆற்றலை பெருகிறது. உட்கொள்ளும் உணவு குடலுக்கு சென்று அங்குள்ள நுண்ணுயிர்கள் அந்த உணவை செரிக்கச் செய்து இந்த ஆற்றலை உருவாக்குகிறது.
இந்நிலையில் புவியீர்ப்பு விசை குறைந்து அல்லது முற்றிலும் இல்லாது (மைக்ரோ கிராவிட்டி) உள்ள விண்வெளியில் உடலில் உள்ள குடல் இயக்கம் மிகவும் மெதுவாக இருப்பது தெரியவந்துள்ளது.
உட்கொண்ட உணவு குடலில் இருக்கும்போது ஆற்றலை உருவாக்க நுண்ணுயிரிகள் அதில் உள்ள நார்ச்சத்து மற்றும் கார்போஹைடிரேட்-ஐ விட புரதங்களையே அதிகம் சார்ந்து செயல்படுகிறது.
வழக்கமாக ஆற்றலுக்கு நார்ச்சத்து மற்றும் கார்போஹைடிரேட் அதிகம் தேவைப்படும் நிலையில் விண்வெளியில் புரதத்தை மட்டுமே குடல் நுண்ணுயிர்கள் அதிகம் சார்ந்துள்ளதால், இது உடல் ஆரோக்கியத்தை பாதிக்கிறது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது வருங்காலங்களில் வருடக்கணக்கில் விண்வெளியில் இருக்க வேண்டிய சூழல் வீரர்களுக்கு எழும்போது கடும் உடல்நல பிரச்சனையாக மாறலாம்.
மலசிக்கல் என்பது விண்வெளி வீரர்களையே பொதுவாக காணப்படும் பிரச்சனையாகவே உள்ளது. இதற்கான உயிரியல் காரணம் என்று பார்த்தால் அது, உடல் இயக்கம் மற்றும் குடலில் வாழும் நுண்ணியிர்களின் செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றமே ஆகும்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்தபோதும் திரும்பி வந்தபின்னரும் 52 விண்வெளி வீரர்களிடம் இருந்து பெறப்பட்ட மொத்தம் 488 ரத்த மாதிரிகளை விஞ்ஞானிகள் ஆய்வு செய்துள்ளனர்.
2 முதல் 9 மாதங்கள் வரை இந்த வீரர்கள் விண்வெளியில் இருந்துள்ளனர். அவர்கள் ரத்த மாதிரிகள் முகம் அவர்கள் விண்ணில் இருக்கும்போது உடலின் கூறுகளில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன.
மொத்தம் 40 கூறுகள் அவர்களின் உடலில் மாறுதலுக்கு உள்ளாகி உள்ளன. இந்த மாறுதலுக்கு உள்ளான கூறுகளில் பெரும்பாலானவை குடல் நுண்ணியிரிகள், ஆற்றலுக்காக புரதத்தை உடைக்கும்போது தான் ஏற்பட்டுள்ளது.
இந்த ஆய்வு, மைக்ரோகிராவிட்டி அதாவது புவியீர்ப்பு விசை இன்மை குடலின் செயல்பாடுகளை மெதுவாக்குகிறது என்பதையே உணர்த்துகிறது.
இதன் பொருள் என்னவென்றால் உணவு செரிமானமும் அதிலிருந்து கழிவு பிரிவதும் செரிமான மண்டலத்தில் மிக மெதுவாகவே நிகழ்கின்றன என்பதாகும்.
எனவே மலம் உருவாவதே மெதுவாக இருப்பதால் மலம் கழிப்பது குறைகிறது. நீண்ட நாட்கள் இவ்வாறு இருக்கும்போது அது உடல்நலத்தை பாதிக்கிறது. இதனால் தேவையில்லாத நச்சுப்பொருட்களும் உருவாகிறது.
இந்த ஆய்வில் கண்டறியப்பட்ட ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த மாற்றங்கள் விண்வெளிக்கு ஏவப்பட்ட சில நாட்களிலேயே தொடங்கிவிடுகின்றன.
விண்வெளி வீரர்கள் பூமியில் தரையிறங்கிய சில நாட்களுக்குள் இவை இயல்பு நிலைக்குத் திரும்பிவிடுகின்றன.
வீரர்களின் உணவுமுறையை சரியான முறையில் தீர்மானிப்பதன் மூலம் இந்த மாற்றங்களை ஓரளவு தவரிக்கலாம். ஆனால் நீடித்த தீர்வு என்பது அடுத்தடுத்த ஆய்வுகள் மூலமே எட்டப்படும்