

சீனாவில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோருடன் நடைபெற்ற முத்தரப்பு சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரஷிய அதிபர் புதின், உக்ரைனுக்கு எதிரான போரை தாங்கள் தொடங்கவில்லை என்றும், சமரச பேச்சுவார்த்தைக்கு உக்ரைனும், ஐரோப்பாவும் இன்னும் தயாராக இல்லை என்று தெரிவித்துள்ளார்.
“நாங்கள் போரைத் தொடங்கவில்லை, உண்மையில், நாங்கள் எந்தப் போரையும் தொடங்கியதே இல்லை. நாங்கள் அதை முடிவுக்குக் கொண்டுவர மட்டுமே முயற்சிக்கிறோம்,” என்று கூறினார்.
போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் உக்ரைன் தலைமைக்கு ஆர்வமில்லை என்றும், ஏனெனில் ஒரு சமாதான ஒப்பந்தம் தேர்தல்களை நடத்த நிர்பந்திக்கும் என்றும், அந்தத் தேர்தல்களில் தற்போதைய அதிகாரிகள் தோல்வியடைவார்கள் என்றும் தெரிவித்தார்.
“அதிகாரத்தை இழந்தால், மேற்கத்திய உதவிகளிலிருந்து கிடைக்கும் வருமானத்தையும் இழக்க நேரிடும் என்பதை கீவ் அரசாங்கம் புரிந்துகொண்டுள்ளது” என தெரிவித்தார்.
ஆனால் காலப்போக்கில் நிச்சயம் அவர்கள் பேச்சுவார்த்தைக்கு உடன்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.
மேலும் “கிரிமியன் பாலத்தில் நடந்த தாக்குதல்களுக்குப் பிறகு, நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம்” என்றும், இதற்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
2014-ஆம் ஆண்டு உக்ரைனில் நடந்த அரசியல் மாற்றங்கள் மற்றும் தென்கிழக்கு உக்ரைனில் (டோன்பாஸ்) நடந்த ராணுவ நடவடிக்கைகளே மோதலுக்கு காரணம் என கூறியுள்ளார்.
எட்டு ஆண்டுகளாக இந்த நெருக்கடியைத் தீர்க்க ரஷ்யா முயற்சித்ததாகவும், உக்ரைனும் ஐரோப்பாவும் சமரசங்களுக்கு இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மற்ற விவகாரங்கள் தொடர்பாக தொடர்ந்து பேசிய புதின், பல முக்கியப் பிரச்சினைகளில் மூன்று நாடுகளும் பரஸ்பர உடன்பாட்டை எட்டியதாகவும், இந்தச் சந்திப்பை "ராஜதந்திர வரலாற்றில் ஒரு முக்கிய அத்தியாயம்" என விவரித்தார்.
கடந்த 2013ம் ஆண்டு அப்போதைய ரஷ்ய ஆதரவு உக்ரைன் அதிபர் விக்டர் யானுகோவிச் ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தலைநகர் கீவ்வில் போராட்டங்கள் வெடித்தன.
2014 பிப்ரவரியில் போராட்டம் தீவிரமடைந்தது, காவல்துறையுடனான மோதலில் பலர் உயிரிழந்தனர். நிலைமை கைமீறிப் போனதால், பிப்ரவரி 22 அன்று அதிபர் யானுகோவிச் நாட்டை விட்டுத் தப்பி ரஷ்யாவில் தஞ்சம் புகுந்தார்.
இதனால், உக்ரைன் நாடாளுமன்றம் யானுகோவிச்சைப் பதவி நீக்கம் செய்துவிட்டு, ஐரோப்பிய ஒன்றிய ஆதரவு கொண்ட இடைக்கால அரசை அமைத்தது.
இடைக்கால அரசு அமைந்த சில நாட்களுக்கு பிறகு, உக்ரைனில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை விரும்பாத ரஷ்யா, பிப்ரவரி இறுதியில் அடையாள சின்னங்கள் இல்லாத தனது வீரர்களை உக்ரைனின் தெற்குப் பகுதியான கிரிமியா தீபகற்பத்திற்குள் அனுப்பியது.
அங்குள்ள முக்கிய அரசு கட்டிடங்களை கைப்பற்றியது. தொடர்ந்து சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படாத ஒரு பொது வாக்கெடுப்பை முன்னெடுத்தது.
இதில் பெரும்பான்மையான மக்கள் ரஷ்யாவுடன் இணைய விருப்பம் தெரிவித்ததாகக் கூறி, மார்ச் 18 அன்று கிரிமியாவை ரஷ்யா அதிகாரப்பூர்வமாகத் தன்னுடன் இணைத்துக் கொண்டது.
இதனை உக்ரைனும், மேற்கு நாடுகளும் சட்டவிரோத ஆக்கிரமிப்பு எனக் கண்டித்தன.
பின்னர், ரஷ்யாவின் இந்த ஆக்கிரமிப்பு கிழக்கு உக்ரைனுக்கும் பரவியது. 2014 ஏப்ரலில், ரஷ்ய ஆதரவு ஆயுதக் குழுக்கள் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் நகரங்களில் உள்ள அரசாங்கக் கட்டிடங்களையும், பாதுகாப்பு வசதிகளையும் கைப்பற்றின.
ரஷ்யாவின் முன்னாள் கூட்டாட்சி பாதுகாப்பு சேவை அதிகாரி இகோர் கிர்கின் தலைமையிலான ஆயுதமேந்திய நபர்கள் இந்த ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட நிலையில், இந்த கைப்பற்றலுக்கு எதிராக உக்ரைன் தனது பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையைத் தொடங்கியது.
இந்த மோதல் கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளாக தொடர்ந்து வந்தது. இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி உக்ரைன்மீது முழு அளவிலான தாக்குதல்களை தொடங்க ரஷ்யப் படைகளுக்கு உத்தரவிட்டார் புதின்.
இந்தப் போர்தான் தற்போது 3 ஆண்டுகளை கடந்து தொடர்ந்து வருகிறது. இந்தப் போரால் உக்ரைன் பெரும் உயிர்சேதத்தையும், பொருட்சேத த்தையும் சந்தித்துள்ளது.