இங்கிலாந்தில் நிலவி வரும் கடுமையான வறட்சி மற்றும் தண்ணீர் பற்றாக்குறையைக் கையாள்வதற்காக, அங்கு வாழும் தெற்காசிய மற்றும் பிற ஆசிய வம்சாவளி குடும்பங்கள் தங்களது சமையல் மற்றும் மத வழிபாட்டு முறைகளில் தண்ணீரைச் சேமிக்க வேண்டும் என பிரிட்டன் அரசு ஒரு புதிய விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கியுள்ளது.
குறிப்பாக, 'அரிசியை ஐந்து முதல் ஏழு முறை கழுவுவதற்குப் பதிலாக இரண்டு முறை மட்டுமே கழுவுங்கள்' என்ற பிரிட்டனின் இந்த அறிவுரை தற்போது அந்த நாட்டு மக்களிடையே பெரும் விவாதத்தையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனின் தண்ணீர் ஒழுங்குமுறை வாரியமான 'Ofwat' அமைப்பின் நிதி உதவியுடன், 'சவுத் ஸ்டாஃப்ஸ் வாட்டர்' மற்றும் 'கேம்பிரிட்ஜ் வாட்டர்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்திய மதிப்பில் சுமார் 2.8 கோடி ரூபாய் செலவில் இந்தத் திட்டத்தைத் தொடங்கியுள்ளன.
இங்கிலாந்தில் ஏற்பட்டுள்ள கடும் வெப்ப அலைகளால் நதிகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் கடுமையாக சரிந்துள்ளதால், சிறுபான்மையினர் மற்றும் பல்வேறு மத சமூகங்களிடையே தண்ணீர் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தெற்காசியப் குடும்பங்களில் சமைப்பதற்கு முன்பு அரிசியை தண்ணீர் குழாயில் ஐந்து முதல் ஏழு முறை, அதாவது தண்ணீர் தெளிவாகும் வரை கழுவுவது ஒரு வழக்கமான நடைமுறையாகும்.
இந்த பிரசாரத்தின் மூலம், அரிசியை இரண்டு முறை மட்டுமே கழுவ வேண்டும் என ஆசிய மக்களை பிரிட்டன் அரசு கேட்டுக்கொண்டுள்ளது. பிரபல சமையல் கலைஞர் பிங் கூம்ப்ஸ் இதற்கான வீடியோக்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
இப்படி செய்வதன் மூலம் ஒவ்வொரு முறையும் சமைக்கும் போது 5 லிட்டர் தண்ணீரைச் சேமிக்க முடியும் என்றும், அரிசி கழுவிய தண்ணீரை வீணாக்காமல் செடிகளுக்கு ஊற்றலாம் என்பதையும் இந்த திட்டம் பரிந்துரைக்கிறது.
இஸ்லாமிய மக்கள் தொழுகைக்குச் செல்வதற்கு முன்பு தங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ளும் 'உது' என்ற மத சடங்கின் போதும் தண்ணீரைச் சேமிக்க இந்தத் திட்டம் வழிகாட்டுகிறது.
கேம்பிரிட்ஜ் மத்திய மசூதியுடன் இணைந்து, குழாயைத் திறந்து வைத்தபடி கைகளைக் கழுவுவதற்குப் பதிலாக, ஒரு லிட்டர் ஜக்கைப் பயன்படுத்தி தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஓடும் குழாய் தண்ணீரில் கைகழுவினால் ஒரு தடவைக்கு 6 முதல் 12 லிட்டர் தண்ணீர் வீணாவதாக இந்தப் பிரசாரம் சுட்டிக்காட்டுகிறது.
இந்த விழிப்புணர்வு திட்டம் பிரிட்டனில் பெரும் அரசியல் மற்றும் சமூக எதிர்ப்புகளைச் சந்தித்து வருகிறது.
பிரிட்டனின் பழமையான குழாய் கட்டமைப்புகள் காரணமாக அங்குள்ள தண்ணீர் நிறுவனங்களால் தினமும் சுமார் 300 கோடி லிட்டர் தண்ணீர் கசிவு ஏற்பட்டு வீணாகிறது. இதை சரி செய்யாமல் மக்களின் கலாச்சார, மத நடைமுறைகளைக் குறை கூறுவது தவறு என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மக்களின் வரிப் பணத்தையும், வாட்டர் பில்களையும் இது போன்ற "விசித்திரமான திட்டங்களுக்கு" வீணாக்குவது நியாயமற்றது என கன்சர்வேடிவ் கட்சியின் மந்திரி மைக் வுட் கடுமையாகச் சாடியுள்ளார்.
அரிசியை பலமுறை கழுவுவது வெறும் ஸ்டார்ச்சை நீக்குவதற்கு மட்டுமல்ல, அது அரிசியின் தரத்தை மேம்படுத்தவும், பதப்படுத்தும் போது சேரும் அசுத்தங்களை நீக்கவும் அவசியம் என்று சமையல் மற்றும் சுகாதார நிபுணர்கள் பிரிட்டன் அரசின் இந்த நீர் சேமிப்பு ஆலோசனையை மறுத்துள்ளனர்.
இருப்பினும், வறட்சி காலங்களில் அனைத்து சமூக மக்களையும் உள்ளடக்கிய ஒரு கூட்டு முயற்சி மூலம் தண்ணீர் நுகர்வைக் குறைக்கவே இந்தச் சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தண்ணீர் துறை அதிகாரிகள் தற்காப்பு வாதம் செய்துள்ளனர்.