

பிரான்ஸ் நா்தில் விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடியை எதிர்த்து நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்கள் பெரும் வன்முறையாக வெடித்துள்ளன. அதிபர் இமானுவேல் மக்ரோனின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில், வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை எதிர்த்து பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் நடத்திய மாபெரும் போராட்டம் கடுமையான வன்முறையாக வெடித்துள்ளது. நாட்டின் பல்வேறு நகரங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், உலகப் போர்களைக் கடந்து நிலைத்து நின்ற வரலாற்றுச் சிறப்புமிக்க 143 ஆண்டுகள் பழமையான லிமோகேஸ் நகராட்சி அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டு முழுமையாக சேதமடைந்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழல் காரணமாக ஐரோப்பாவில் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனைத் தடுத்து நிறுத்தத் தவறிய அரசாங்கத்தைக் கண்டித்தும், வரவிருக்கும் அதிபர் தேர்தலை முன்னிட்டும் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் குதித்தனர்.
அமைதியான முறையில் தொடங்கப்பட்ட இந்த ஊர்வலம், மாஸ்க் அணிந்த சில வன்முறை கும்பல்களின் நுழைவால் மிகக் கடுமையான வன்முறையாக மாறியது.
குறிப்பாக, லிமோகேஸ் நகரில் திரண்ட முகமூடி அணிந்த போராட்டக்காரர்கள் நகராட்சி கட்டடத்திற்குள் அத்துமீறி நுழைந்து தீ வைத்தனர். இந்த கொடூர தீ விபத்தால் பழமை வாய்ந்த அந்த கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து, மூன்றில் இரண்டு பங்கு பகுதிகள் முற்றிலாகவும் சாம்பலாகியுள்ளன. உள்ளூர் நிர்வாகத்தின் தகவல்படி, வரலாற்றுச் சின்னமான இந்த கட்டடம் தீயில் கருகியது பிரான்சின் கலாச்சார பாரம்பரியத்திற்கு மிகப்பெரிய பேரிழப்பாகும்.
பிரான்சின் இரண்டாவது பெரிய நகரமான மார்செய்யில், போராட்டக்காரர்கள் நகராட்சி அலுவலகத்தின் கதவுகளை உடைத்து உள்ளே நுழைந்தனர். அங்கு அலுவலகப் பொருட்களை அடித்து நொறுக்கியதுடன், சிலைகடத்தல்களிலும் ஈடுபட்டனர். நிலைமை கைமீறியதால் மேயர் உடனடியாக கூடுதல் காவல்துறையினரை அனுப்புமாறு கோரிக்கை விடுத்தார். இதேபோல் லீல் நகரிலும் மேயர் அலுவலகம் சூறையாடப்பட்டது.
தலைநகர் பாரிஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் வணிக வளாகங்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் ஆடம்பர கடைகள் குறிவைத்து சூறையாடப்பட்டுள்ளன. வன்முறையைக் கட்டுப்படுத்தக் களமிறங்கிய காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்குமிடையே கடுமையான மோதல்கள் வெடித்தன. கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் நீர்த்தாரை வண்டிகளைப் பயன்படுத்தி காவல்துறையினர் கூட்டத்தைக் கலைக்க முயன்றனர். இந்த மோதல்களின் போது நாடெவிலும் இதுவரை 1,200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 150-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் நாட்டின் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு தெரிவித்துள்ளார். மேலும், செயின்ட்-எட்டியென் நகரில் நடந்த மோதலில் 17 வயது சிறுவன் ஒருவனின் கை காவல்துறை வீசிய கட்டுப்பாட்டுக் குண்டு வெடித்ததில் துண்டிக்கப்பட்ட துயரச் சம்பவமும் அரங்கேறியுள்ளது.
கடந்த செப்டம்பரில் பாரிஸ் புறநகர்ப் பகுதிகளில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் உள்ளூர் போராட்டமாகத் தொடங்கிய இந்த இயக்கம், தற்போது நாடு முழுவதிலும் உள்ள பொதுமக்களை ஈர்த்துள்ளது. பெட்ரோல் விலை உயர்வு மற்றும் வாழ்க்கைச் செலவினங்களின் அதிகரிப்பு ஆகியவை பொதுமக்களின் ஆத்திரத்தை உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளன. பாரிஸ் நகரின் மையப்பகுதியில் உள்ள முக்கிய மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டு, அதிபர் மாளிகையைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிரான இந்த வன்முறைகளை வன்மையாகக் கண்டித்துள்ள அதிபர் இம்மானுவேல் மக்ரோன், பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியவர்கள் மற்றும் வன்முறையில் ஈடுபட்ட அனைவரும் சட்டத்தின் முன்நிறுத்தப்பட்டு கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என எச்சரித்துள்ளார். வரவிருக்கும் அதிபர் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இந்த பொருளாதார நெருக்கடியும் வன்முறையும் பிரான்ஸ் அரசியல் களத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.