

வெனிசுலாவில் அதிபராக இருந்த நிக்கோலஸ் மதுரோவை போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் அமெரிக்க ராணுவம் கைது செய்து தனது நாட்டுக்குள் அழைத்து சென்றது.
இதையடுத்து வெனிசுலாவின் இடைக்கால அதிபராக பதவியேற்ற டெல்சி ரோட்ரிக்ஸ் அமெரிக்காவுடன் இணக்கமாக உள்ளார்.
இதனால் அமெரிக்கா-வெனிசுலா இடையே மோதல் போக்கு மறைந்து உள்ளது. இரு நாடுகளும் கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஈடுபட்டு உள்ளன.
இந்தநிலையில் அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத் வெனிசுலாவுக்கு சென்று உள்ளார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அமெரிக்காவும், வெனிசுலாவும் ராணுவ உறவுகளை மீண்டும் தொடங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளன.
வெனிசுலா முன்பு பிராந்திய அளவில் நமக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்த நிலையிலிருந்து தற்போது ஒத்துழைப்பு அளிக்கும் பாதுகாப்புப் பங்காளியாக மாறியுள்ளது.
இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் அளித்த ஒத்துழைப்பே வெனிசுலாவில் நிலைத்தன்மையை ஏற்படுத்தவும், அங்குள்ள போதைப்பொருள் பயங்கர வாதிகளை முற்றிலுமாக ஒழிக்கவும் உதவியது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ராணுவ ஒப்பந்தத்தில் ராணுவப் பயிற்சி முதல் உளவுத்துறைத் தகவல்களைப் பகிர்ந்துகொள்வது வரை பல்வேறு அம்சங்கள் இடம்பெற்று உள்ளன.
இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் கூறும்போது,"இந்த தொழில்நுட்ப-ராணுவ ஒத்துழைப்பு மிக உயர்ந்த நிலையை எட்டும் என்று நம்புகிறேன். இதன் மூலம் நாம் பொதுவான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள முடியும்" என்றார்.