அமெரிக்க வரலாற்றிலேயே மிக நீண்ட காலம் சிறை தண்டனை அனுபவித்த கைதியான பிரான்சிஸ் கிளிஃபோர்ட் ஸ்மித், தனது 101-வது வயதில் காலமானார்.
சுமார் 69 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை கம்பிகளுக்கு பின்னால் வாழ்ந்த இவர், கனெக்டிகட் மாகாணத்தில் உள்ள ஒரு முதியோர் காப்பகத்தில் பரோலில் இருந்தபோது உயிர் பிரிந்தது.
ஜூலை 1949 ஆம் ஆண்டு கனெக்டிகட்டின் கிரீன்விச் நகரில் உள்ள 'இந்தியன் ஹார்பர் யாட்ச் கிளப்'- ல் நடந்த கொள்ளைச் சம்பவம்.
இந்த சம்பவத்தின் போது 68 வயதான இரவுக்காவலர் குரோவர் ஹார்ட் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1950 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஸ்மித் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, மின்சார நாற்காலியில் வைத்து மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
ஸ்மித்தின் சிறை வாழ்க்கை பல அதிரடி திருப்பங்களைக் கொண்டது. அவர் தன் வாழ்நாளில் 8 முறை மரண தண்டனையிலிருந்து நூலிழையில் தப்பினார்.
ஒவ்வொரு முறையும் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, கடைசி நிமிடத்தில் தடை உத்தரவு கிடைத்தது.
இதனால், கைதிகளுக்கான இறுதி ஆசையாக வழங்கப்படும் "கடைசி உணவு" முறையை 8 தனித்தனி சந்தர்ப்பங்களில் அவர் சாப்பிட்டது உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்டது.
1951-ல் அவருக்கு எதிராக சாட்சி சொன்ன முக்கிய நபர், தனது வாக்குமூலத்தை திடீரென மாற்றிக்கொண்டார். 1954-ல் அவர் மரண அறைக்குள் நுழைய இன்னும் இரண்டு மணி நேரமே இருந்த நிலையில், அவரது மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.
தொடர்ந்து 60 ஆண்டுகளுக்கும் மேலாக கனெக்டிகட் சிறையிலேயே ஸ்மித் அடைக்கப்பட்டார். 1967-ல் வெறும் 12 நாட்கள் சிறையிலிருந்து தப்பியது மற்றும் 1975-ல் கிடைத்த குறுகிய கால பரோல் ஆகியவற்றைத் தவிர, அவரது ஒட்டுமொத்த இளமை மற்றும் முதுமைப் பருவம் சிறையிலேயே கழிந்தது.
தான் அந்த கொலைக் களத்தில் இருக்கவே இல்லை என இறுதிவரை அவர் தனது குற்றமற்ற நிலையை வாதிட்டு வந்தார்.
69 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த ஸ்மித்துக்கு, 2020 ஜூலை மாதம் அவரது நலிவடைந்த உடல்நிலை மற்றும் முதிர்ந்த வயதைக் கருத்தில் கொண்டு மாநில பரோல் வாரியம் பரோல் வழங்கியது.
அதன்பின்னர் முதியோர் பராமரிப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த அவர், தற்போது இயற்கை எய்தியுள்ளார்.