

ஈரான் மீதான தாக்குதல்களை அமெரிக்கா ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்து இரண்டாவது நாளாக நிறுத்திவைத்தது; ஈரானும் அவ்வாறே செய்ததாக தெரிவித்தது. சமீபத்திய மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள இடைக்கால போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளுக்கு இரு நாடுகளையும் மீண்டும் கொண்டுவருவதற்கான முயற்சிகள் தொடரும் நிலையில் இரு நாடுகளும் தாக்குதல்களை நிறுத்தியுள்ளன.
ஹார்முஸ் நீரிணை வழியாக செல்ல முயன்ற கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, கடந்த இரண்டு வாரங்களாக ஈரானின் கடலோர பகுதிகள் மற்றும் உள்கட்டமைப்புகளை அமெரிக்கா குறிவைத்து தாக்கி வந்தது. இந்நிலையில், திடீரென தாக்குதல்களை நிறுத்தியதற்கான காரணம் தெளிவாக தெரியவில்லை.
"தூதரக ரீதியிலான தீர்வையே விரும்புவதாக அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்; அதே சமயம், ஹார்முஸ் நீரிணையிலோ அல்லது நட்பு நாடுகளுக்கு எதிராகவோ ஈரான் பயங்கரவாத நடவடிக்கைகளை தொடர்ந்தால், அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் வாய்ப்பையும் அவர் கைவிடவில்லை," என்று வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு இயக்குனர் ஸ்டீவன் சியுங் கூறினார்.
மேலும், "பேச்சுவார்த்தை மூலம் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு ஈரான் முயற்சிப்பதே புத்திசாலித்தனமானது. இல்லையெனில், என்ன நடக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும்," என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த இரண்டு இரவுகளாக அமெரிக்கா தாக்குதல்களை நிறுத்தியுள்ளதால், ஈரானும் தாக்குதல்களை நிறுத்தியுள்ளதாக அந்நாட்டு ராணுவ செய்தி தொடர்பாளர் ஈரானின் அரசு தொலைக்காட்சியில் தெரிவித்தார். சமீபத்திய நாட்களில், இப்பகுதியில் அமெரிக்க படைகளை அனுமதித்துள்ள நாடுகளுக்கு எதிராக ஈரான் பதிலடி தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதில் ஜோர்டானில் உள்ள ஒரு தளத்தில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
ஜூன் மாத மத்தியில் இரு நாடுகளுக்கும் இடையே இடைக்கால ஒப்பந்தம் கையெழுத்தானதில் இருந்து தொடங்கிய 60 நாள் காலக்கெடுவின் இரண்டாம் பாதி இப்போது நடந்து கொண்டிருக்கிறது.
பதற்றத்திற்கு முக்கிய காரணமான ஈரானின் அணுசக்தி திட்டம் உள்ளிட்ட விவாதிக்கப்பட வேண்டிய முக்கிய பிரச்சினைகள் இன்னும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. அதே வேளையில், இரு தரப்பினரிடையேயும் பேச்சுவார்த்தையை தொடர மத்தியஸ்தர்கள் முயற்சித்து வருகின்றனர்.
மத்தியஸ்த முயற்சிகளில் ஈடுபட்டுள்ள ஒரு பிராந்திய அதிகாரி கூறுகையில், தூதரக ரீதியிலான நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டிருப்பது "பதற்றத்தைத் தணிப்பதற்கான முயற்சிகளுக்கு உதவும் ஒரு நேர்மறையான அறிகுறி" என்றும் தெரிவித்தார்.